புதுச்சேரியில் காய்ச்சலுக்கு 747 குழந்தைகள் பாதிப்பு: மருத்துவமனைகளில் 200 குழந்தைகளுக்கு சிகிச்சை

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்தவமனை, புதுச்சேரி.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்தவமனை, புதுச்சேரி.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் ஃப்ளூ காய்ச்சலால் 747 குழந்தைகள் வெளிப்புற சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். புதிதாக 50 குழந்தைகள் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 200 ஆனது.

புதுவையில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. நாள்தோறும் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டுள்ளன. புதுவை அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் தொடர்ந்து அதிகளவு கூட்டம் இருந்தது. காய்ச்சல் குறைவாக இருந்த குழந்தைகளுக்கு மருந்துகள் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். கடுமையாக பாதிக்கப்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழிமையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் வந்ததால் கூட்டம் அலைமோதியது. காய்ச்சிய குடிநீரை பருகும்படியும், முககவசம் அணியும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 63, மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 610, காரைக்காலில் 74 பேர் என 747 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

இன்று குழந்தைகள் நல பிரிவில் அரசு மருத்துவமனையில் 36, மகளிர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 144, காரைக்காலில் 20 பேர் என 200 குழந்தைகள் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று மட்டும் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50 ஆகும். பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "கிராமப்பகுதிகளில் சிறப்பு சிகிச்சை முகாம்கள் நடத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு சிகிச்சையும் தரவேண்டும்" என்று கோரினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in