தேனி அரசு மருத்துவமனையில் இளம் தாய் மரணத்துக்கு தவறான ஊசி செலுத்தியது காரணமா? - மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவு

உயர் நீதிமன்றம் கிளை, மதுரை.
உயர் நீதிமன்றம் கிளை, மதுரை.
Updated on
1 min read

மதுரை: தேனி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட இளம்பெண் இறந்தது தொடர்பாக விசாரிக்க மருத்துவக் குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''எனது மகள் கனிமொழியை பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனர். ஜூன் 15-ல் மகளுக்கு தையல் பிரிக்கப்பட்டது. மறுநாள் என் மகளுக்கு பயிற்சி மருத்துவர் ஊசி ஒன்றை செலுத்தினார். அதன் பிறகு அவருக்க கடுமையான வலி ஏற்பட்டது. பின்னர் ஜூன் 21-ல் உயிரிழந்தார். என் மகள் இறப்புக்கான காரணத்தை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடலை வாங்கிக் கொண்டு தகனம் செய்யுமாறு போலீஸார் எங்களை மிரட்டினர். இதனால் மகளின் உடலை பெற்றுக்கொண்டு சத்திரப்பட்டி மயானத்தில் அடக்கம் செய்தோம்.

உடல் நலத்துடன் இருந்த என் மகளுக்கு பயிற்சி மருத்துவர் தவறான ஊசியை செலுத்தியுள்ளார். அதனால் அவர் இறந்துள்ளார். இதனால் என் மகளின் உடலை மூத்த தடயவியல் மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரசோதனை நடத்தவும், தனி மருத்துவக்குழு அமைத்து என் மகளின் இறப்புக்கான காரணத்தை ஆராய்ந்து இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதி குமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். அப்போது கனிமொழியின் மருத்துவ அறிக்கையை தேனி மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்தார்.

பின்னர் நீதிபதி, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீனுடன் ஆலோசித்து மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறை தலைவர், மயக்கவியல் துறைத் தலைவர், இருதயவியல் துறைத் தலைவர் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். இந்த மருத்துவக் குழுவினர் கனிமொழியின் மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்து இறப்புக்கான காரணத்தை கண்டறித்து ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in