

சென்னை: தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளையும் மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுடிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.
தமிழ் வர்த்தக சபையின் மாதாந்திர காலை உணவு கூட்டம், ‘வானமே எல்லை’ என்ற தலைப்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நேற்று நடைபெற்றது. தமிழககாவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி கி.ஜெயந்த் முரளி தலைமை தாங்கி காவல்துறை அனுபவங்கள் உள்ளிட்டவை குறித்துப் பேசினார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா: அப்போது, ‘‘தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட அத்தனைசிலைகளையும் மீட்டு மீண்டும் தமிழகத்துக்கு கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார். தொடர்ந்து உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வர்த்தக சபையின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர், கவுரவ செயலாளர் பி.ரவிகுமார் டேவிட், கொரியா வர்த்தக மையத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவன இயக்குநர் ஜெனரல் ஜிஹ்வான் யூன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.