Published : 28 Nov 2016 09:21 AM
Last Updated : 28 Nov 2016 09:21 AM

விரைந்து இழப்பீடு வழங்குவதற்காக மோட்டார் வாகன தீர்ப்பாயத்திலும் விபத்து அறிக்கை தாக்கல்: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துகளில் பாதிக்கப் படுபவர்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்க ஏதுவாக, விரிவான விபத்து அறிக்கையை மோட்டார் வாகனத் தீர்ப்பாயத் திலும் போலீஸார் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் விபத்து நடந்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து, மோசடி யாக இழப்பீடு கோரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சோழமண்டலம் காப்பீடு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.விஜயராகவன் ஆஜராகி வாதிட்டார். மனுக்களை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

சாலை விபத்துகளில் பாதிக்கப் படுபவர்களுக்கு நியாயமான இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, விபத்து களில் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்கும் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் பயன்பெற, விபத்து குறித்த விரிவான அறிக்கையை சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மட்டுமின்றி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்திலும் போலீஸார் இனி மேல் தாக்கல் செய்ய வேண்டும்.

விபத்து தொடர்பான அனைத்து தகவல்களும் அதில் இருக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி 3 மாதத்துக்குள் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x