

கோபி வட்டம் மேவானி கிராமத்தில் உள்ள 3,000 வீடுகள், கெம்மநாயக்கன்பாளையத்தில் 3,500 வீடுகள் மற்றும் விளைநிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை என பத்திரப்பதிவுத் துறைக்கு வக்பு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. குறிப்பிட்ட வீடு மற்றும் விளைநிலங்களை விற்கவோ, பத்திரப்பதிவு செய்யவோ தங்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் எனவும், வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மேவானி கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், பத்திரப்பதிவுத்துறை மற்றும் வக்பு வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், மேவானி கிராமத்தில், 10 சென்ட் நிலம் மட்டும் வக்பு வாரியத்தின் சொத்தாக வருவாய்துறை ஆவணங்களில் பதியப்பட்டுள்ளது. ஆனால், 517 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்ட நிலத்துக்கும் வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது. மேலும், சத்தியமங்கலம் வட்டம் மலையபுதூர் கிராமத்தில், சர்வே எண் 266 முதல், 271 வரை இதேபோல தவறுதலாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெம்மநாயக்கன்பாளையம் முழுவதும் உள்ள 3,000 வீடுகள், வக்பு வாரியச் சொத்து என தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது, எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனசபை சார்பிலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு கடந்த மாதம் மனு அனுப்பப்பட்டது.
இதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மேவானி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்ஷினி, ‘கோபி வட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்படும்’ என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இப்பிரச்சினை குறித்து கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி கூறுகையில், ‘வருவாய்த்துறையிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், மேவானி கிராமத்தில் உள்ள குடியிருப்பு வக்பு வாரியத்துக்குச் சொந்தமானதாக குறிப்பிடப்படவில்லை. மக்கள் கோரிக்கையின் அடிப்படையில், கோபி வட்டாட்சியர் இன்று (நேற்று) தல ஆய்வு நடத்தியுள்ளார். அவரது அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.