

‘‘மக்களவைத் தேர்தலில் உண்மை யிலேயே தவறு செய்தவர்களை, விரைவில் நடைபெறவுள்ள மாவட்ட, ஒன்றிய, நகரத் தேர்தல்களில் தொண்டர்களே தோற்கடிப்பார்கள்’’ என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து, திமுக தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தலில், திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோற்றுவிட்டது. இனி இங்கே இருந்து பயனில்லை, பழுத்த மரத்தைத் தேடிச் செல்லலாம் என்று நடவடிக்கை எடுக்கப்பட்ட 33 பேரில், ஒருவரைத் தவிர வேறு யாரும் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை.
அந்த ஒருவரும்கூட, அங்கி ருந்து வந்தவர்தான். அவரை நாம்தான் தூக்கி வைத்து அமைச்சர் பதவி கூடக் கொடுத்துப் பார்த்தோம். ஆனால், அவர் தன் குணத்தைக் காட்டிவிட்டார். விளக்கம் அளிப்பதற்குப் பதில், திமுக தலைமையைத் தாக்கி பதில் அளித்திருக்கிறார். அவரைத் தவிர மற்றவர்கள் அளித்த விளக்கங்களை உண்மை என்று ஏற்றுக் கொண்டு, அவர்கள் மீது தரப்பட்ட புகார்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்ற முடிவுக்கு வந்துவிடவில்லை. ஒரு மாபெரும் இயக்கத்தில், ஒரே இயக்கத்தில் இருந்தாலும் ஆங்காங்கு ஓரிருவரிடையே கருத்து வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும்.
திமுகவிலே பிளவு ஏற்படும் என்று எண்ணி வாய் பிளந்து, மனப்பால் குடித்தவர்கள் எல்லாம் திமுகவின் நடவடிக்கை காரணமாக ஏமாந்து போய்விட்டார்கள். திமுக கண்ணாடிக் குடுவை அல்ல. கண்ணாடி உடைந்தால் ஒட்ட வைக்க முடியாது. திமுக ஒரு மாபெரும் நீர்த்தேக்கம். நீரடித்து நீர் விலகாது.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் வருத்தம் அடையலாம். அவர் களுக்கு எல்லாம் ஆறுதலாகத்தான் விரைவில் மாவட்ட, ஒன்றிய, நகரத் தேர்தல்கள் வரவிருக் கின்றன. அந்தத் தேர்தலில் உண்மையிலேயே தவறு செய்த வர்களை, திமுக தொண்டர்களே தோற்கடிக்கச் செய்வார்கள்.
அதையும் மீறி தவறுகள் தொடருமேயானால், புகார்கள் தொடர்ந்து வருமேயானால், பெரியார் கூறிய கழகக் கட்டுப்பாடுதான் முக்கியம் என்பதைத் தவிர வேறு வழியில்லை. கட்டுப்பாடே, திமுகவின் உயிர் மையம். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.