Published : 21 Sep 2022 06:16 AM
Last Updated : 21 Sep 2022 06:16 AM

தி.மலை | பழங்குடி இருளரின் மரண வழக்கை கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

தண்டராம்பட்டு அடுத்த கடப்பன்குட்டையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பழனியின் குடும்பத்தினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் கிராமம் கடப்பன்குட்டை பகுதியில் வசித்தவர் பழனி(46). இவர், தனது வீட்டின் அருகே உள்ள தென்பெண்ணையாற்றுக்கு கடந்த 15-ம் தேதி சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த சாத்தனூர் அணை மீன் குத்தகை தாரர் கார்த்தி தலைமையிலான கும்பல், தென்பெண்ணையாற்றில் மீன் பிடிக்க வந்ததாக கூறி பழனியை தாக்கினர். இதில் பழனி மயங்கி விழுந்துள்ளார். பின்னர், கும்பல் புறப்பட்டு சென்றுவிட்டது.

இந்நிலையில் மயக்கம் தெளிந்து வீட்டுக்கு சென்ற பழனியின் உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், அவருக்கு நாட்டு மருத்துவம் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 18-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல், திரு வண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அவரது மகன் தேவேந் திரன் கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் பிரிவில் சாத்தனூர் அணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், பழங்குடி இருளர் பழனியின் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், பழனியை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும், பழனியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கோரிக்கையை நிறைவேற்றும் வரை பழனியின் உடலை பெற மாட்டோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பழனியின் குடும்பத்தினர் பங்கேற்ற போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. பழனியின் சொந்த கிராமமான கடப்பன்குட்டையில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்துக்கு வட்டாரத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், பாரி, செல்வன், பிரகலநாதன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழனியின் உடலை 2-வது நாளாக வாங்க மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x