Last Updated : 20 Sep, 2022 05:38 PM

7  

Published : 20 Sep 2022 05:38 PM
Last Updated : 20 Sep 2022 05:38 PM

“கற்பித்தல் பணிகளை மட்டும் ஆசிரியர்களுக்கு கொடுங்கள்” - உணருமா தமிழக பள்ளிக் கல்வித் துறை?

கோப்புப் படம்

சென்னை: தமிழக அரசுப் பள்ளியில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தற்போது பொது விவாதமாக மாறியுள்ளது. தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவது கல்வியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றுவோரையும் நிரந்தர ஆசிரியர்களாக மாற்றுவதிலும் அரசு தரப்பில் தொடர்ந்து தயக்க நிலை நிலவுகிறது. மேலும், கிராமப்புறங்களில் இன்னமும் பல வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியரே பாடங்கள் எடுக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது.

இத்துடன் பள்ளிக் கல்வித் துறையில், அரசுப் பள்ளி மாணவர்களின் சுயவிவரங்கள், கல்வி சார்ந்த பல்வேறு தகவல்கள் பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் ஆசிரியர்கள்தான் பதிவேற்றுகின்றனர். மேலும் பள்ளி சார்ந்த ஊழியர்கள் பற்றாக்குறையால் அங்குள்ள பணிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் சூழல் அங்கு உள்ளது. இதனால் மாணவர்களுடன் ஆசிரியர்கள் செலவிடும் கற்றல் - கற்பித்தல் நேரம் பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் - பள்ளி கல்வித் துறை அமைச்சகத்துக்கு இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

‘ஆசிரியர்களுக்கு போதிய நேரம் கொடுக்கப்படவில்லை’ - கல்வி செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி கூறும்போது “ கரோனா காரணமாக குழந்தைகள் கடந்த 2 வருடங்களாக சரிவர படிக்கவில்லை. கரோனாவுக்கு முன்னர் 8-ஆம் வகுப்பில் வகுப்பறையில் படித்த குழந்தைகள், இரண்டு வருடங்களில் ஆன்லைன் கல்வி பயின்று தற்போது 10 வகுப்புக்காகத்தான் வகுப்பறை வந்திருக்கிறார்கள். அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் 20 சதவீதம்தான் பயின்று இருக்கிறார்கள். இத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலைக்குச் சென்ற குழந்தைகள், இடை நிற்றல் குழந்தைகள் அனைவரிடமும் தொய்வும், மனசோர்வும் உள்ளது.

இவ்வாறான சூழலில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் முழுமையாக இருக்க வேண்டிய காலமாக இது உள்ளது. ஆனால், இப்போது எமிஸ் பணிகள் என பல பணிகள் ஆசியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது வாக்காளர் ஐடியையும் - ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டிய பணி சில மாவட்டங்களில் ஆசிரியர்களிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான பணிகளை நான் செய்கிறேன் என்றால், என் மாணவர்களை யார் கவனித்து கொள்வது? இதனால் ஆசிரியர் - மாணவர்களிடத்தில் உரையாடல்கள் குறைகிறது.

உமா மகேஸ்வரி


அடுத்தது பாடமாவது குறைந்த அளவில் இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு பிள்ளைகளுக்கு அவ்வளவு பாடங்கள் உள்ளன. முன்பு எட்டாம் வகுப்பில் படித்த குழந்தைகளைவிட தற்போது எட்டாம் வகுப்பில் படிப்பவர்களுக்கு எழுத்துகள் தெரிவதில்லை. வாசிப்பு குறைப்பாடும் மாணவர்களிடத்தில் உள்ளது. இவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். இவற்றை எல்லாம் பள்ளிக் கல்வித் துறையில் உள்ளவர்கள் உணர வேண்டும்.

அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், வாசிப்பு இயக்கம் போன்ற நல்ல திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அதை எல்லாம் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளும் சூழலை அரசு அமைத்து கொடுக்க வேண்டும். பள்ளிக் கூடத்தில்தான் ஆசிரியர் இருக்க வேண்டும். பாடத் திட்டங்களை குறைத்தால் நல்லது. இதன் மூலம் மாணவர்களுக்கு வரும் கூடுதல் நெருக்கடிகளை தவிர்க்கலாம்.

கல்வி என்பது மூலதனம். இதனை உணர்ந்து அரசு ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க வேண்டும். இன்னும் சில இடங்களில் ஓர் ஆசிரியர் முறை உள்ளது. இவற்றில் மாற்றம் வேண்டும். மாணவர்கள் படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள்தான் காரணம் என்று கூறுகிறார்கள். உண்மையில் ஆசிரியர்களுக்கு போதிய நேரம் கொடுக்கப்படுவதில்லை என்பதே உண்மை” என்றார்.

‘கற்றல், கற்பித்தல் பணிகளை மட்டும் ஆசிரியர்களுக்கு கொடுங்கள்’ - கல்வி செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “கல்வி ஆண்டின் தொடக்கத்தின் முன்பாக, எத்தனை பள்ளிகள் தமிழகத்தில் உள்ளது, அதில் எவ்வளவு மாணவர்கள் படிக்கிறார்கள், ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு உள்ளது, எவ்வளவு காலியிடங்கள் உள்ளன, இன்னும் கூடுதல் பணியிடங்கள் எத்தனை உருவாக்க வேண்டும் என்பதை ஏப்ரல் மாதத்திலே அவர்கள் தயாரித்து வைத்திருக்க வேண்டும். ஆனால், நாம் இப்போது கல்வி ஆண்டின் பாதியில் உள்ளோம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

அரசு அறிவித்த காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமித்தார்கள். இவ்வாறு நியமிப்பதே தவறு. அதுவும் அவர்களை குறைந்த வருமானத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். எத்தனை பேரை அரசு நியமித்தது என்பது குறித்து வெளிப்படையான தகவல் எதுவும் இல்லை. இதனை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்கள் இல்லாமல் எப்படி பள்ளிக்கூடம் இயங்க முடியும். இவை எல்லாம் வன்முறை இல்லையா? பள்ளிகளில் நிர்வாகப் பணிகளுக்காக நிர்வாக ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் நியமிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை தவிர எந்தப் பணியும் அவர்களுக்கு இருக்கக் கூடாது. அப்போது ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வியில் முழுக் கவனம் செலுத்த முடியும்” என்றார்.

பள்ளிக் கல்வி சார்ந்து பல ஆக்கபூர்வமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், அவை எல்லாம் களத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்பதே நிலவரங்கள் சொல்கின்றன. வெறும் திட்டங்களை அறிமுகம் செய்தால் மட்டும் போதாது; ஆசிரியர்களின் தேவையை பூர்த்தி செய்து, ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாத தமிழகப் பள்ளிகளை உருவாக்குவதில் அரசு கவனம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x