Published : 20 Sep 2022 04:09 AM
Last Updated : 20 Sep 2022 04:09 AM

மருத்துவ சிகிச்சை முறைகளை பரிமாறிக் கொள்ள தமிழகம் - மேகாலயா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகம் - மேகாலயா இடையே மருத்துவ சிகிச்சை முறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று கையெழுத்தானது. இதில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மேகாலயா மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஜே.கே.சங்மா உள்ளிட்டோர்படம்: ம.பிரபு

சென்னை: மருத்துவ சிகிச்சை முறைகளைப் பரிமாறிக் கொள்வதற்காக தமிழகம்- மேகாலயா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நேற்று கையெழுத்தானது.

மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்மா, முதன்மை சுகாதாரத் துறைச் செயலர் பி.சம்பத்குமார், செயலர்கள் ஜோரோம்பேடா, ஆர்.எம்.குர்பா ஆகியோர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இக்குழுவினரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது, ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி ஆகிய பயிற்சிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழக சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், தேசிய சுகாதார குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சம்சத்பேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜேம்ஸ்ஜே.கே.சங்மா மற்றும் அவரது குழுவினர் 2 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்திலுள்ள மருத்துவக் கட்டமைப்பு, செயல்பாடுகளைக் கண்டறிந்து, சிறப்பான மருத்துவ திட்டங்களின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு, அதனை அவர்களது மாநிலத்தில் செயல்படுத்தவுள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 ஆகிய முன்மாதிரி திட்டங்களின் செயல்பாட்டையும், தமிழகத்திலுள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதாரநிலையங்களின் செயல்பாடுகளையும் பார்வையிடவுள்ளனர்.

தமிழகத்திலுள்ள உயர் மருத்துவ சேவைகளான ரோபாடிக் அறுவை சிகிச்சை, புற்றுநோய் உயர் கதிர்வீச்சு சிகிச்சை, குறைந்த செலவில் முழு உடல் சிறப்பு பரிசோதனை போன்ற திட்டங்களையும், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக கிடங்கு ஆகியவற்றையும் பார்வையிடுகின்றனர்.

மேகாலயா மாநிலத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் உள்ளனர். தமிழகம் மேகாலயா மாநிலங்களிடையே மருத்துவ முறைகளை பரிமாறிக் கொள்வதற்கும், மலைவாழ் மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை எச்1 என்1 இன்புளூயன்சா காய்ச்சலால் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 368பேருக்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது. வீடுகளில் 89 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 264 பேரும், அரசு மருத்துவமனைகளில் 15 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகி விடும். எனவே பதற்றமடைய வேண்டியதில்லை. காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, குணமாகும் வரை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தரமான சிகிச்சை

மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜேம்ஸ்ஜே.கே.சங்மா கூறும்போது, “மேகாலயா சிறிய மாநிலம். தமிழகத்தில் சுகாதாரத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்துடன் மருத்துவ சிகிச்சை முறைகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் எங்கள் மாநில மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x