

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் ஆதிச்சபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி அழகேசன்(36). இவருக்கு, ஆரோக்கிய மேரி என்ற மனைவி, இலக்கியா(17), யோகப்பிரியா(13), ஆகிய மகள்கள், அகிலவாணன்(9) என்ற மகனும் உள்ளனர். அழகேசன், 2 ஏக்கர் நிலத்தில் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்திருந்தார்.
நேரடி விதைப்பு செய்திருந்த நிலையில், தண்ணீரின்றி விதைநெல் முளைக்காத வயலுக்கு நேற்று முன்தினம் மாலை சென்ற அழகேசன், அங்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, கோட்டூர் காவல் நிலையத்தில் அழகேசனின் மனைவி ஆரோக்கியமேரி புகார் கொடுத்துள்ளார். அதில், ‘தண்ணீர் இல்லாததால் உரிய நேரத்தில் சாகுபடியைத் தொடங்க முடிய வில்லை. தற்போது, நேரடி விதைப்பு செய்துள்ள வயலில் ஒரு மாதத்துக்கு மேலாகியும் தண்ணீரின்றி விதைகள் பாதி முளைத்தும் முளைக்காமலும் உள்ளன.
விரக்தியுடன் காணப்பட்டார்
இதுகுறித்து கடந்த ஒரு வாரமாகவே கவலையுடனும், மனவிரக்தியுடனும் என் கணவர் காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வயலுக்குச் சென்ற அவருக்கு அங்கேயே மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த வர்கள் தெரிவித்து, ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்குள் உயிரிழந்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, அழகேசனின் குடும்பத் துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆதிச்ச புரம் பேருந்து நிறுத்தத்தில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரி முத்து, திமுக ஒன்றியச் செயலாளர் விஎஸ்ஆர்.தேவதாஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மன்னார்குடி வட்டாட்சியர் மலர்கொடி, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். கோரிக்கையை தமிழக அரசுக்கு தெரியப்படுத்துவதாக அவர் உறுதியளித் ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அழகேசனின் உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுநாதபுரத் தில் விவசாயி கோவிந்தராஜ்(70), நேரடி விதைப்பு செய்திருந்த விதைநெல் முளைக்காத விரக்தியில் கடந்த மாதம் 30-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக அவரது மகன் போலீஸில் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் ஒரு விவசாயி மரணம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி செபஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரை மாணிக்கம் மகன் ராஜேஸ்கண்ணா (42). இவர் கடந்த 25 நாட்களுக்கு முன், 3 ஏக்க ரில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால், பயிர் முளைக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று காட்டுக் கோட்டை என்ற ஊரில் கூலி வேலைக்காக நாற்று பறிக்கச் சென்றார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில், அவர் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.