

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, அவரது வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு தாம்பரம், லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஹபிப் அகமது. அரிசி வியாபாரி. இவருக்கும் சைதாப்பேட்டையை சேர்ந்த, நஸ்ரின் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு நஸ்ரின் கர்ப்பமானதால் அவரது தாயார் வீட்டில் ஹபிப் அகமது விட்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கரு கலைந்துள்ளது.இதன் பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஹபிப் அகமது மனைவியை வீட்டுக்கு அழைத்து வரவில்லை. இது தொடர்பாக முஸ்லிம் ஜமாத்தில் நஸ்ரின் புகார் செய்துள்ளார். இரு தரப்பினரிடமும் ஜமாத் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு ஹபிப் அகமது உடன்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் ஹபிப் அகமது வீட்டின் முன்பு அமர்ந்து நஸ்ரின் தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்த தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸார், நஸ்ரினிடம் சமரசம் செய்து வருகின்றனர்.