பள்ளிகளில் மாணவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டக் கூடாது: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

பள்ளிகளில் மாணவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டக் கூடாது: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பள்ளிகளில் மாணவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் சாதிய பாகுபாடு காட்டப்பட்ட விவகாரத்தில், முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டு, அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு, அவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் சாதிய பாகுபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். மேலும், பள்ளிகளில் மாணவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டப்படுகிறதா என, தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுக்கள் கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதால்தான், அங்கு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கல்வி அறிவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புளு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக, முதல்வர் மற்றும் மற்ற துறை அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையில் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in