Published : 20 Sep 2022 06:40 AM
Last Updated : 20 Sep 2022 06:40 AM

வக்பு வாரிய சொத்துகளை மீட்டெடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை: வாரியத் தலைவர் திட்டவட்டம்

மயிலாடுதுறை: வக்பு வாரிய சொத்துகளை மீட்டெடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, ஆங்கில வழிக் கல்விக்கான புதியக் கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வக்பு வாரிய சொத்துகளின் பல பகுதிகள் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்டும், போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டும் உள்ளதை அறிந்து, அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு வக்பு வாரியம் எடுத்து வருகிறது.

தமிழக அரசின் நில அளவைத் துறை அளித்த வக்பு வாரிய சொத்துகளின் விவரங்கள் அனைத்தையும் அந்தந்த பகுதி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து, குறிப்பிட்ட சர்வே எண்கள் கொண்ட சொத்துகளை விற்கவோ, வாங்கவோ முடியாத அளவுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்கட்டமாக கூறியுள்ளோம். இனிதான், தகுந்த விசாரணை மேற்கொண்டு மற்றப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

திருச்செந்துறை கிராமம்: அண்மையில், திருச்சி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் 389ஏக்கர் அடங்கிய திருச்செந்துறை கிராமத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அக்கிராமத்தில் வசிக்கக்கூடியவர்கள், சார்பதிவாளர் அலுவலகத்தில் எவ்வித பதிவும் செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு சில பதிவுகள் கிராமங்களின் பெயர்களில் இருப்பதால், ஆவண காப்பகத்தில் உள்ள வக்பு வாரிய சர்வே நம்பர், சப் டிவிஷன் உள்ளிட்ட பதிவு விவரங்களை எடுக்க முனைந்துள்ளோம். அதற்கு சிலநாட்கள் ஆகும் என்பதால், அதுவரை அப்பகுதிகளில் ஏற்கெனவே இருந்த நிலையே தொடரலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரசுப் பதிவுகள் அடிப்படையில்.. இதற்காக, அரசு பதிவுகளில்உள்ளவாறு வக்பு வாரிய சொத்துகளை மீட்டெடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அரசு பதிவுகளின் அடிப்படையில்தான் சார் பதிவாளர்களின் அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு மிக அதிகமாக உள்ள இடங்களில் மட்டும் எங்களின் ஆட்சேபணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். எனவே,எங்களின் முடிவில் மாற்றமில்லை. இதுதொடர்பான விஷம பிரச்சாரத்துக்கு அஞ்சப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x