

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் கொலைவெறி தாக்குதலிலிருந்து தாம் பலமுறை தப்பியதாகவும், இன்னும் கொலை மிரட்டல்கள் இருப்பதாகவும், ஆகவே தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘தமிழகத்தைப் பொருத்தவரை எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இல்லை. உளவுத்துறை அறிக்கையின்படி தொல்.திருமாவளவனின் உயிருக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்றார்.
அதற்கு நீதிபதி, ‘‘எந்தவொரு அரசியல் கட்சித் தலைவராக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும், இது தொடர்பாக ஏற்கெனவே அவர் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்தும் போலீஸார் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த 2 வாரத்துக்கு தள்ளி வைத்தார்.