Published : 13 Jul 2014 10:00 AM
Last Updated : 13 Jul 2014 10:00 AM

அலோகத்துக்கு உதாரணமாக எங்களை அடையாளப்படுத்தும் ஆசிரியர்கள்: ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கும் திருநங்கைகள்

‘‘பிராணிகள் மீது கூட கரிசனம் காட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களுக்காக இரக்கப்பட யாரும் தயாரில்லை. அதனால், எங்களுக்கான பிரச்சினைகளும் கனவுகளும் எண்ணங்களும் புதைக் கப்பட்டதாகவே இருக்கிறது’’ என்று குமுறுகிறார் திருநங்கை சொப்ணா.

‘தமிழிய வரலாற்றில் திருநங்கைகளின் தொன்மங்கள்’ என்ற தலைப்பில் ஜூலை 13-ல் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் கருத்தரங்கு நடக்கிறது. இதில் தமிழ் சமுதாயத்துடன் இணைந்த திருநங்கைகள் வரலாறு குறித்து ஆவணப்பட இயக்குநர் பிரியா பாபுவும் திருநங்கைகளுக்கு உள்ள நிகழ்காலத் தடைகள் குறித்து சொப்ணா, ஸ்ரீநிதி ஆகியோரும் உரை வீசுகிறார்கள். அதற்காக தயார்படுத்திக் கொண்டிருந்தவர்கள் நம்மிடம் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

‘‘வசிக்கும் வீடு, உணவு, உடை எல்லாமே திருநங்கைகளுக்கு பிரச்சினைதான். ஆனால், மத்திய - மாநில அரசுகள் எங்களது பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. திருநங்கைகளின் பிரச்சினைகளை அவர்களே சரிசெய்துகொள்வார்கள் என்று நினைக்கிறார்கள். ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளானால் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுக்கிறார்கள். ஆனால், நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால்கூட கேட்பதற்கு ஆளில்லை.

எங்கள் மீதான கேலி, கிண்டலை தடுக்கவும் சட்டம் இல்லை. தனி மனித சுதந்திரமும் பாதுகாப்பும் அடிப்படை உரிமை என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆனால், எங்களுக்கு அத்தகைய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. அனைத்தையுமே நாங்கள் நீதிமன்றம் சென்றுதான் சாதிக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் 30 ஆயிரம் திருநங்கைகள் இருக்கிறோம். எங்கள் பெற்றோரில் யாராவது ஒருவர், ‘எங்கள் பிள்ளையைக் காணவில்லை’ என போலீஸில் புகார் கொடுத் திருக்கிறார்களா? இல்லையே..

பெற்றோரே எங்களைப் பாரமாக நினைத்துத் துரத்துகிறார்கள். பாலினம் மாறும் குழந்தைகளுக்கு அரசுத் தரப்பிலிருந்து மானியமோ உதவித் தொகையோ கிடைத்தால் பெற்றோர் அந்தக் குழந்தைகளை கடைசி வரை தங்களோடு வைத்திருப்பார்கள். பாலின மாற்றம் பள்ளிப் பருவத்திலேயே தெரிந்துவிடும். அப்படியான குழந்தைகளுக்கு தேவையான கல்வி அறிவை அரசாங் கம் கொடுக்க வேண்டும். முதலில் இதுகுறித்து ஆசிரியர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால், அவர்களில் சிலர் மாணவர்களிடம், அலோகத்துக்கு உதாரணமாக திருநங்கைகளை அடையாளப்படுத்தி கேவலப்படுத்துகிறார்கள்.

படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீதமா வது இட ஒதுக்கீடு கொடுக்கணும். இதெல்லாம் இல்லாததால்தான் பிழைக்க வழி தெரியாமல் திருநங்கைகளில் சிலர் தவறான வழிகளுக்குப் போய் தங்களது வாழ்க்கையை தொலைக்கிறார்கள்’’ என்று சொன்னார் சொப்ணா.

தொடர்ந்து பேசினார் பிரியாபாபு. ‘‘தமிழர்களின் கலாச்சாரத்தில், பண்பாட்டில் திருநங்கைகள் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்திருக் கிறார்கள். பக்தி இலக்கியம், இதிகாசம், வரலாறு அத்தனையிலும் திருநங்கைகளைப் பற்றிய பதிவுகள் இருக்கு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்திலேயே திருநங்கைகளைப் பற்றிய பதிவுகள் இருக்கு. அந்தக் காலத்தில், போராட்ட வீரர்களாகவும் சேனாதிபதிகளாகவும் இசைக் கலைஞர்களாகவும் நடனக் கலைஞர்களாகவும் புலவர்களாகவும் கவிஞர்களாகவும் திருநங்கைகள் இருந்திருக்கிறார்கள்.

ஆக, திருநங்கைகள் சமூகம் தமிழ் சூழலுக்கு புதிதானது அல்ல. இது காலம் காலமாக தமிழ் மக்களின் வாழ்வியல் சூழலோடு இணைந்து வாழும் சமூகம். ஆனால், தமிழ் சமுதாயத்துக்கு கூத்தாண்டவர் கோயிலில் கூடிக் கலைவார்கள் என்பதைத் தவிர திருநங்கைகளைப் பற்றி வேறெதுவும் தெரியவில்லை. இந்த நிலைமை சீக்கிரமே மாறும். மாற்றத்தை உருவாக்கும் ஜனத்திரள் கூட்டங்களை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் திருநங்கைகள் குறித்த வரலாற்றுப் பதிவுகள் குறித்து கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். திருநங்கைகள் யார் என்பதை தமிழ் சமூகம் புரிந்துகொள்ளும் காலம் தொலைவில் இல்லை’’ தீர்க்கமாக சொன்னார் பிரியா பாபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x