

தமிழகத்தில் தொழில்நிறுவனங் களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, சென்னையில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை தொழில்துறையினர் நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம், முன்னாள் தலைவர்கள் ரமேஷ்பாபு, ராமமூர்த்தி, தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி, தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன், பல்லடம் ஜவுளித் தொழில் முனைவோர் சங்கத்தின் தலைமை ஆலோசகர் முருகேசன் உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின் கட்டண உயர்வால் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து முறையிட்டனர்.
இதுகுறித்து கொடிசியா முன்னாள் தலைவர் ரமேஷ்பாபு மற்றும் தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி ஆகியோர் கூறியதாவது:
மின் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அமைச்சருடன் சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடினோம்.
தாழ்வழுத்த மின்நுகர்வோருக்கு உச்ச நேர மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்க வேண்டும் அல்லது இந்த பிரிவின்கீழ் உள்ள நுகர்வோருக்கு உச்ச நேர மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்.
உயர் அழுத்த மின் நுகர்வோருக்கு ‘டிமாண்ட்’ கட்டணம் ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை ரூ.450 ஆக குறைக்க வேண்டும். உச்ச நேரம் தற்போது 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை முன்பு இருந்தது போல 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்.
குறைந்தபட்ச உச்ச நேர மின் கட்டணம் 0- 50 கேவி வரை உள்ள நுகர்வோருக்கு ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 0 -110 கேவி வரை ரூ.150 வசூலிக்கப்பட உள்ளது. இந்த வித்தியாசத்தை தவிர்க்க 51-110 கேவி வரை என கணக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘மின்வாரியத்தின் வளர்ச்சியில் தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்வரும் கோடை காலம் உள்ளிட்ட தொலைநோக்கு தேவைகளுக்கான பார்வையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
தொழில்துறையினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.
அமைச்சர் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானியுடன் நடந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. விரைவில் தொழில்துறையினர் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.