Published : 20 Sep 2022 04:05 AM
Last Updated : 20 Sep 2022 04:05 AM

கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த இதயம்: மூளைச்சாவு அடைந்தவரால் 6 பேருக்கு மறுவாழ்வு

கோவை

கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர். இதயம் விமானத்தில் சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள நாதம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் நடராஜ் (27). கடந்த 16-ம் தேதி கோவை அவிநாசி சாலையில் நடந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, நடராஜின் இதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், கல்லீரல் சேலம் தனியார் மருத்துவமனைக்கும், இரண்டு கண்களும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் வழங்கப்பட்டதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதயத்தை விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. எம்ஜிஎம் மருத்துவமனையின் டாக்டர்கள் இருவர் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் 4 பேர் தலைமையில், நேற்று முன்தினம் இரவு 8.35 மணிக்கு புறப்பட்ட தனியார் விமானம் மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, விமானநிலைய நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஸ்கேனிங் நடைமுறையில் இருந்து இதயம் கொண்டு செல்லப்பட்ட பெட்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

பின்னர், நடராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. உடலுக்கு டீன் நிர்மலா, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். தானமாக பெறப்பட்ட உடல்உறுப்புகள் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x