சென்னை 3-வது முழுமை திட்டம் தயாரிப்புக்கான பயிலரங்கம் தொடக்கம்; அண்ணா சாலை உட்பட 15 சாலைகளை விரிவாக்க திட்டம்: அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை 3-வது முழுமை திட்டம் தயாரிப்புக்கான பயிலரங்கம் தொடக்கம்; அண்ணா சாலை உட்பட 15 சாலைகளை விரிவாக்க திட்டம்: அமைச்சர் முத்துசாமி தகவல்
Updated on
2 min read

சென்னை: சென்னையில் அண்ணா சாலைஉட்பட 15 பெரிய சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். உலக வங்கி உதவியுடன் சென்னை பெருநகரப் பகுதிக்கு 3-வது முழுமை திட்டத்துக்கான (2027-2046) தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணியில் சென்னைபெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஈடுபட்டுள்ளது. பயனாளர்கள் பங்கேற்பு அணுகுமுறை மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளை உள்ளடக்கிய சென்னை பெருநகர பகுதிக்கு அதாவது 1,189 சதுர கி.மீ.க்கு இந்த ஆவணம் தயாரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பயனாளர்களின் கருத்துகளை கேட்கும் வகையிலான பயிலரங்கம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. பயிலரங்கை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மேயர் ஆர்.பிரியா, வீட்டுவசதி துறை செயலர் ஹித்தேஷ்குமார் மக்வானா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.

3-வது முழுமை திட்டத்துக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பது குறித்து பயனாளர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் இதில் பங்கேற்கச் செய்யும் வகையில் பிரத்யேக இணையதளத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: அமைச்சர் முத்துசாமி: மக்களுக்குத்தான் தாங்கள் வாழும் பகுதியில் உள்ள பிரச்சினைகள் தெரியும். எனவே, சென்னை பெருநகருக்கு 3-வது முழுமை திட்டம் தயாரிக்க, மக்களின் கருத்துகளை கேட்க வேண்டியது அவசியம். 50 ஆண்டுகளுக்கு பிறகான தேவையின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது. பல பகுதிகளில் சாலைகள் முடிவுறாமல் உள்ளன.

எனவே, சாலைகளை வலைப்பின்னல் வகையில் அமைக்க திட்டமிட உள்ளோம். அண்ணா சாலைஉட்பட 15 பெரிய சாலைகளை அகலப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதற்காக இடம் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு புதிய கட்டிடங்களுக்கு அனுமதி கோரி வரும்போது, விரிவாக்கத்துக்கு தேவையான இடத்தை விட்டு கட்டுமாறு அறிவுறுத்தப்படும். அந்தஇடத்துக்கு இழப்பீடும் வழங்கப்படும். அப்பணிகள் முடிந்ததும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும். எந்தெந்த சாலைகள் என்பது பின்னர் தெரிவிக்கப்படும்.

சென்னை வெளிவட்ட சாலையில் 50 மீட்டர் பகுதி அரசுக்கு சொந்தமானது. இதை ஒட்டியுள்ள பகுதிகளில் 200 மீட்டர் அளவுக்கு உள்ள பகுதிகளை சேர்த்து அவற்றில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். சென்னை மேயர் ஆர்.பிரியா: சென்னையின் நீர்வளம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கழிவுநீர், திடக்கழிவுகளை அகற்றுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

வீட்டுவசதி துறை செயலர் ஹித்தேஷ்குமார் மக்வானா: சென்னைமட்டுமின்றி அனைத்து நகரங்களுக்கும் இதுபோல முழுமை திட்டம் தயாரிக்க உள்ளோம். ஓசூர்,கோவை பெருநகர முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 20 நகர பெருந்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். சென்னை முழுமை திட்டத்தில் நில வகைப்பாடுகள் முழுமையாக செய்யப்படும். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லையை மேலும் விரிவாக்க அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும். இதற்கு மண்டல பெருந்திட்டம் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, மாதவரம் சுதர்சனம், இ.கருணாநிதி, வேலு, அரவிந்த் ரமேஷ், பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in