

சென்னை: சிண்டிகேட் தேர்தலில் முறைகேடு நடப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லுரிகளில் பணியாற்றும் முதல்வர்கள், சிண்டிகேட் தேர்தலில் போட்டியிட்டு தேர்வாகும்நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், சிண்டிகேட் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த செப். 14-ம் தேதி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், முறையான அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு சென்னை பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸ் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அலுவலக நேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள், செப்டம்பர் 21-ம் தேதிக்குள், இந்த பிரச்சினை தொடர்பான விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்கத் தவறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.