

சென்னை: வட சென்னை அனல் மின் திட்டம் நிலை-3 (800 மெகாவாட்) திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். ஆய்வின்போது கட்டுமானப் பணிகளான சுழலி, அதைச் சார்ந்தஇயந்திரங்கள், குளிர்ந்த நீர் கொண்டு செல்லும் பைப்கள் அமைக்கும் பணி, கடல்நீரைச் சுத்திகரிக்கும் நிலைய பணி, 765 கி.வோல்ட் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பணிகள், நிலக்கரி கொண்டு செல்லும் பகுதிகளைப் பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது மின் உற்பத்தியை மின் தொகுப்பில் இணைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு செல்ல தேவையான மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேரடி ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது இந்த நிதியாண்டுக்குள் பணிகள் நிறைவுற்று மின் உற்பத்தியைத் தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் திட்டத்தின் இதர பணிகளான கரி கையாளும் அமைப்பு, சாம்பல் கையாளும் அமைப்பு, கடல்நீரைக் குடிநீராக்கும் அமைப்பு ஆகியவை குறித்தும் ஆலோசனை செய்தார். இப்பணியின் தேவையை உணர்ந்து கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களின் உதவிக் கொண்டுபோர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (திட்டம்) பொறுப்பு எம்.ராமச்சந்திரன், இயக்குநர் (உற்பத்தி) பொறுப்பு த.ராஜேந்திரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.