Published : 20 Sep 2022 06:58 AM
Last Updated : 20 Sep 2022 06:58 AM
சென்னை: தமிழ்நாடு அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு ஈரோடு மாவட்டம் திண்டல் வெள்ளாளர் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டி.என்.சி.இளங்கோவன் தலைமை தாங்கினார். தலைவர் ராஜா வரவேற்றார். பொருளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
இந்த மாநாட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சின்ராஜ் எம்.பி., சரஸ்வதி எம்எல்ஏ மற்றும் பலர் பேசினர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி விரைவில் வகுப்புகளைத் தொடங்க நிர்வாகத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாமல் தடுக்க பள்ளிகளின் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் உரிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சுமார் 75 சதவீத உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைந்தபட்சமாக நிர்ணயிக்க வேண்டும்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட நலத்துறை மூலமும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உரிய கல்விக் கட்டணங்களை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள், தாளாளர்கள் கலந்து கொண்டுபேசினார்கள். முடிவில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திருப்பூர்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT