Published : 20 Sep 2022 06:12 AM
Last Updated : 20 Sep 2022 06:12 AM

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை அரக்கோணம், அச்சரப்பாக்கம் வரை விரிவாக்கம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், உலக வங்கியின் உதவியுடன் `சென்னை பெருநகர பகுதிக்கு 3-வது முழுமை திட்டத்துக்கான தொலைநோக்கு ஆவணம்' தயாரிப்பதற்கான பயிலரங்கத்தை அமைச்சர்கள் சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தேனாம்பேட்டை, தனியார் ஹோட்டலில் நேற்று தொடங்கி வைத்தனர். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, துறை செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் உடனிருந்தனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) எல்லை அரக்கோணம், அச்சரப்பாக்கம், திண்டிவனம் வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய 1,189 சதுர கி.மீ.க்கான 3-வது முழுமைத் திட்டம் தொடர்பான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்கான பயிலரங்கதொடக்க விழா சென்னையில்நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

பெருநகரம் வளர்ச்சியடையும்போது அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டியது அரசின் கடமையாகும். சென்னையின் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாப்பது, அழகுபடுத்துவது, வெள்ள வடிகால்களை சீரமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சிகுழும எல்லையானது அரக்கோணம், அச்சரப்பக்கம், திண்டிவனம் வரையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கிராமங்களில், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சிஎம்டிஏ வரம்புக்குள் ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. அதை இப்போதே பாதுகாக்க வேண்டும்.

நீதிமன்றம் உத்தரவு போட்டாலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் பொதுப்பணித் துறை கண்காணிப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க வேண்டும். ஏரிகளில் தவறான பட்டா தருவதையும் தடுக்க வேண்டும் என்றார்.

எல்லை விரிவாக்கமா? - கடந்த 2018-ம் ஆண்டு அதிமுகஆட்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூரில் அரக்கோணத்தையும் உள்ளடக்கி 8,878 சதுர கிமீ அளவில் சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதில் சென்னை பெருநகர திட்டத்தின்கீழ், கூடுதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 532 கிராமங்கள், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 69, நெமிலியில் 77 கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய 9 தாலுகாக்களின் கிராமங்களையும் சேர்த்து 1,709 கிராமங்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பொதுமக்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. இந்நிலையில், தற்போது திமுகஆட்சியில் எல்லை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெறுகிறது. ஆனால், விரிவாக்க எல்லைவரம்பு குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்படும்போது எல்லையில் எத்தனை பகுதிகள் இணைக்கப்படும் என்பதுதெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x