Published : 06 Nov 2016 02:48 PM
Last Updated : 06 Nov 2016 02:48 PM

காவிரி டெல்டா விவசாயிகளின் தொடர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ வேதனை

காவிரி டெல்டா விவசாயிகளின் தொடர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பாசனப் பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றி, பயிர்கள் கருகியதால், விவசாயிகள் மூவர் மரணம் அடைந்த சோக நிகழ்வுகள் மிகுந்த வேதனையளிக்கிறது.

திருவாரூர் மாவட்டம் -திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். காவிரியில் உரிய தண்ணீர் வராததாலும், பருவ மழை பொய்த்ததாலும் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்து கருகுவதைக் கண்டு மனம் உடைந்தார்.

அக்டோபர் 31 ஆம் தேதி வயலுக்குச் சென்றவர், கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியதைப் பார்த்து தாங்க முடியாத சோகத்தில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக அவரது மகன் முருகதாஸ் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் -கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரத்தைச் சேர்ந்த அழகேசன் இரண்டு ஏக்கர் குத்தகை நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், காவிரி கடைமடைப் பகுதி வரையில் அரிச்சந்திரா ஆற்றில் வராததால், வயலில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் முளைக்கவில்லை.

நவம்பர் 4 ஆம் தேதி வயலுக்குச் சென்ற அழகேசன் மனக் கவலையில் வேதனையுடன் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதைப்போலவே தஞ்சை மாவட்டம் - திருவையாறு அருகில் உள்ள கீழத் திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ் கண்ணன் இரண்டு ஏக்கர் குத்தகை நிலத்தில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்த பயிர்கள் கருகியதைக் கண்டு வயலிலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடக மாநிலம் வஞ்சித்து வருவதாலும், மத்திய அரசு காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவதாலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி ஒருபோகமாக மாறி விட்டது. விவசாயத் தொழிலை கைவிடாமல் கடன் வாங்கி நேரடி நெல் விதைப்பு செய்திருந்த விவாயிகளின் மரணம் காவிரி டெல்டாவின் அவல நிலையை உணர்த்துகிறது.

தமிழக விவசாயிகளின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில், கடன் தொல்லையிலிருந்து அவர்களைக் காக்க மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கூட்டுறவுக் கடனைத் தள்ளுபடி செய்ததைப் போன்று, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் பாராபட்சம் பாராமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயி கோவிந்தராஜ், அதிர்ச்சியால் உயிரிழந்த விவசாயிகள் அழகேசன், ராஜேஸ் கண்ணன் ஆகியோர் குடும்பத்தினருக்கு மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x