Published : 20 Sep 2022 04:15 AM
Last Updated : 20 Sep 2022 04:15 AM

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் அமைத்த சாலை மின் விளக்குகள் பழுது: பராமரிப்பு டெண்டர் விட்டும் ஒளிராத மதுரை

மதுரை

மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பொருத்தப்பட்ட தெரு விளக்குகள் எரியாமல் பிரதான சாலைகள் இருளில் மூழ்கி உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலை மையப்படுத்தி, ஆயிரம் கோடி ரூபாயில் 13 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டம் முழுமை பெற்றால் ஆஸ்திரேலியாவின் சிட்னி போல மதுரை பொலிவுறு நகராக மாறும் என முன்னாள் அதிமுக அமைச் சர்கள் பெருமிதமாக பேசினர்.

ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தொடங்கிய முதலே டெண்டர்களில் வெளிப் படை தன்மை இல்லை என தற்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தார்.

ஆனால், தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த திட்டம் வேகமெடுக்கவில்லை. இந்த திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் முதல் தெருவிளக்குகள் வரை பழுதடைந்துள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் எதிர்பார்த்தபடி மதுரை பொலிவுறவில்லை.

இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பெரியார் பஸ் நிலையம், மீனாட்சியம்மன் கோயில் அருகே பல்லடுக்கு வாகனக் காப்பகம், புதுமண்டபத்தில் வியாபாரிகளை காலிசெய்ய வைத்து குன்னத்தூர் சத்திரத்தில் அவர்களுக்கு கடைகள் கட்டியது ஆகியவை குறிப்பிடத்தக்கது.

வைகை ஆற்றின் கரையோர நான்கு வழிச்சாலை, மீனாட்சி யம்மன் கோயிலைச் சுற்றி அமைத்த சாலைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை.

வைகை ஆற்றின் கரையோரச் சாலை முழுமை பெறாமல் நிற்கிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ மாசி வீதிகளில் மழைநீர் வழிந்தோட வழியின்றி கடைகளில் தண்ணீர் புகுந்து வருகிறது. மழைநீர் கால்வாய்கள் இருந்தும், அவற்றை மாநகராட்சி சரியாக பராமரிக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

‘ஸ்மார்ட் சிட்டி’திட்டத்தில் அமைக்கப்பட்ட விலை உயர்ந்த மின் விளக்குகள் சில மாதங்கள் மட்டுமே ஒளி வீசின. தற்போது பெரும்பாலான விளக்குகள் எரிய வில்லை.

விளக்குத்தூண் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் மட்டும் ஒப்புக்கு மின்விளக்குகளை சரிசெய்தனர். ஆனால், நேதாஜி சாலை, மாசி வீதிகளில் பொருத்திய தெருவிளக்குகள் எரியாமல் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளதால் பஜாரில் ‘ஷாப்பிங்' செய்ய வரும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தெருவிளக்கு பராமரிப்புக்கு டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஒரே நேரத்தில் 100 வார்டுகளிலும் தெரு விளக்குகள் பழுதடைந்தன. அவற்றை ஒவ்வொரு பகுதியாக சீரமைத்து வருகிறோம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொருத்திய தெரு விளக்குகளையும் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x