காவிரி பிரச்சினையில் விவசாயிகளுக்காக அரசு ஊழியர்கள் போராடுவது திருப்புமுனையை ஏற்படுத்தும்: மன்னார்குடி ரெங்கநாதன் கருத்து

காவிரி பிரச்சினையில் விவசாயிகளுக்காக அரசு ஊழியர்கள் போராடுவது திருப்புமுனையை ஏற்படுத்தும்: மன்னார்குடி ரெங்கநாதன் கருத்து
Updated on
1 min read

காவிரி பிரச்சினையில் விவசாயி களுக்காக அரசு ஊழியர்கள் போராடுவது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் திருவாரூரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் உ.மா.செல்வராஜ் தலைமை வகித்தார். எஸ்.அரவிந்தன், அண்ணாத்துரை உட்பட சங்க நிர்வாகிகள் மற்றும் அரசுப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து, மன்னார்குடி எஸ்.ரெங்க நாதன் பேசியதாவது:

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானதுதான் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு. அதனால்தான் அண்மையில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் காலக்கெடுவையும் நிர்ணயித்தது. அதனைத் தடுக்க கர்நாடகாவின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள் காவிரி பிரச்சினையில் அரசியல் மாச்சரியங்களைக் கடந்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். தமிழகம் போராடிப் பெற்ற உரிமையைக் கிடைக்க விடாமல் செய்யும் கர்நாடகா மற்றும் மத்திய அரசின் முயற்சிகளை நமது ஒற்றுமையால்தான் முறியடிக்க முடியும். இந்தச் சூழலில் அரசு ஊழியர்களின் போராட்டம் காவிரி பிரச்சினையில் திருப்புமுனையாக அமையும் என்றார்.

உண்ணாவிரதத்தில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், விவசாய சங்கத் தலைவர் குடவாசல் சேதுராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். உண்ணா விரதத்தை முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in