Published : 20 Sep 2022 04:35 AM
Last Updated : 20 Sep 2022 04:35 AM

சாத்தனூர் அருகே பழங்குடி இருளர் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றும் வரை உடலை பெற மாட்டோம்: மார்க்சிஸ்ட்

பழங்குடி இருளர் பழனியின் மரணத்துக்கு நீதி கேட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

திருவண்ணாமலை

சாத்தனூர் அருகே பழங்குடி இருளர் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றும் வரை உடலை பெற மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர், கடப்பன் குட்டை பகுதியில் வசிக் கும் தேவேந்திரன், தனது தந்தை பழனியின் மரணத்துக்கு நீதி கேட்டு, சாத்தனூர் அணை காவல் நிலையத்தில் கடந்த 18-ம் தேதி புகார் கொடுத்துள்ளார்.

அம்மனுவில், “நான் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். உணவகத்தில் தொழிலாளியாக எனது தந்தை பழனி பணியாற்றி வந்தார். இவர், எங்களது வீட்டின் அருகே செல்லும் தென் பெண்ணையாற்றுக்கு கடந்த 15-ம் தேதி சென்றார். அப்போது அங்கு, மீன் குத்தகைதாரர் கார்த்தி தலைமையிலான கும்பல் வந்துள்ளது.

அவர்கள், மீன் பிடிக்க வந்ததாக கூறி தாக்கியதில், எனது தந்தை மயக்கமடைந்து விழுந் துள்ளார். அவரை, மீன் பிடிக்கும் வாகனத்தில் ஏற்றியவர்கள் கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு மீன்வளத் துறை சேர்ந்த அலுவலர் சித்ரா உள்ளிட்டோர் இருந்துள்ளனர். பின்னர் மயக்கம் தெளிந்ததும், வீட்டுக்கு வந்த எனது தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால், வீட்டிலேயே நாட்டு மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி அவர் அதிகாலை உயிரிழந்தார். அவரது மூக்கு மற்றும் காதில் ரத்தம் வழிந்திருந்தது. எனது தந்தையை அடித்துக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நீதி வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் மீது சந்தேக மரணம் என்ற பிரிவில் சாத்தனூர்அணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், உயிரிழந்த பழனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பழனியின் மரணத்துக்கு நீதி கேட்டும், சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திருவண் ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி பிணவறை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் சிவக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ராமதாஸ், செயலாளர் செல்வன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அவர்களிடம், துணை காவல் கண்காணிப்பாளர்கள் சின்ராசு (செங்கம்), குணசேகரன் (திருவண்ணாமலை) உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனை ஏற்க மறுத்த போராட்டக் குழுவினர், பழனியின் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றும் வரை, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை பெறமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டக் குழுவினர் புறப்பட்டு சென்றனர்.

மேலும் அவர்கள், நீதி கிடைக்க வில்லை என்றால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x