மணல் குவாரி உத்தரவுகள் மாற்றப்படுகின்றன: உயர் நீதிமன்றம் அதிருப்தி

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

மதுரை: மணல் குவாரி தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மாற்றப்பட்டு புதிய விதிகள் உருவாக்கப்படுகின்றன என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ராமநாதபுரதைச் சேர்ந்த கருணாநிதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் கே.வேப்பங்குளம் கிராமத்தில் மலட்டாறு பகுதியில் 4.95 ஹெக்டர் பரப்பளவில் புதிய மணல் குவாரிக்கு மாவட்ட ஆட்சியர் 2.5.2022-ல் வழங்கியுள்ளார். உரிய கள விசாரணை நடத்தாமல், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்து குவாரி அனுமதி பெற்றுள்ளனர்.

கே.வேப்பங்குளம் அருகே ஆற்றுப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்குழாய் கிணறு மற்றும் கிணறு அமைத்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். மணல் குவாரி செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து தண்ணீர் விநியோகத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, மலட்டாறு பகுதியில் மணல் குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மணல் குவாரி தொடர்பாக உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை மாற்றி அரசு புதிய விதிகளை உருவாக்குகிறது என அதிருப்தி தெரிவித்தனர்.

அரசு தரப்பில், பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டே மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மணல் குவாரிக்கு விதிக்கப்பட்ட விதிகள் குறித்து அரசு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in