Published : 19 Sep 2022 05:51 AM
Last Updated : 19 Sep 2022 05:51 AM

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு இன்று கூடுகிறது: தலைவர், தேசிய உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்க திட்டம்

(கோப்புப்படம்)

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இதில், கட்சியின் மாநிலத்தலைவர் மற்றும் தேசிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டள்ளது.

காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டங்கள் நடத்துவது வழக்கம். கடைசியாக 2017-ல் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர்கள் தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது.

இதற்கிடையே, இந்திய தேசிய காங்கிரஸின் தேர்தல் பிரிவுத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் 9,100 பேரின் பட்டியலை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டார்.

வரும் 20-ம் தேதிக்குள் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, மாநிலத்தலைவர்கள், தேசியப் பொதுக்குழுஉறுப்பினர்கள் ஆகியோரை நியமிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்புமாறு, அனைத்துமாநிலத் தலைவர்களுக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் இன்று (செப். 19) காலை 11.30 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ வளாகத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற உள்ளது.

690 பொதுக்குழு உறுப்பினர்கள்

தேர்தல் பிரிவுத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி வெளியிட்ட பட்டியல்படி, தமிழகத்தில் 690 காங்கிரஸ்நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் விவரத்தை மாநிலத் தலைமைவெளியிடவில்லை. பொதுக்குழுஉறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், அவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அழைப்பிதழை மாநிலத் தலைமை நேற்று முன்தினம் அனுப்பி இருந்தது.

இக்கூட்டத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை, கட்சியின் தேசியத் தலைவருக்கு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றி, கட்சித் தலைமைக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபற்றி சில நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த பொதுக்குழுக் கூட்டத்தின்போது, பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த முறை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தனதுசெல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழி அழைப்பிதழைப் பெற்றபிறகுதான், பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரிகிறது.

யாரெல்லாம் உறுப்பினர்களாகஉள்ளனர் என்பதை, பொதுக்குழுவில் பங்கேற்ற பிறகுதான்தெரிந்துகொள்ளும் நிலையும் உள்ளது.

சில இடங்களில் மாநிலத் தலைமை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, கட்சியில் வேலையே செய்யாதவர்களுக்குக்கூட பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கியுள்ளது. சில தொகுதிகளில், அந்ததொகுதி நிர்வாகிகளை உறுப்பினர்களாக நியமிக்காமல், பிற தொகுதிகளை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், தங்கள் தொகுதியில் பொதுக்குழு உறுப்பினர் ஆவதற்கு ஒருவருக்கும் தகுதி இல்லையா என்று தீர்மானம் நிறைவேற்றி, தொகுதி நிர்வாகிகள் சிலர் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கே.எஸ்.அழகிரி விளக்கம்

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, ‘‘கட்சியில்பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன்தான் நடந்துள்ளது. எந்தக் கட்சியிலும் பொதுக்குழு உறுப்பினர் விவரங்களை வெளியிடுவதில்லை. பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், அனைவரின் விவரங்களையும் தகவல் பலகையில் ஒட்ட இருக்கிறோம். யார் உறுப்பினர் என்பதை அழைப்பிதழில் அனுப்பி, சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிப்படையாக தெரிவித்துவிட்டோம். இத்தனை பேருக்கு தெரிவித்த பிறகு அதை ரகசியம் என கூறமுடியாது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x