

கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் குடும்பக் கட்சி நடத்தும் அரசியல் தலைவர்கள் அச்சமடைந்துள்ளனர் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கத்தை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட முரளிதர ராவ் அளித்த பேட்டி:
கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை மோடி அரசு எடுத்து வருவதால், குடும்பக் கட்சி நடத்தும் அரசியல் தலைவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்கள், மிகப் பெரிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கறுப்பு பணம் இல்லாவிட்டால் குடும்ப அரசியல் நடத்தும் காங்கிரஸ், திமுக தலைமைகள் தங்கள் கட்சியினரை தக்கவைக்க முடியாது. அக்கட்சிகள் காணாமல் போய்விடும். கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால், வருங்காலத்தில் விலைவாசியும், பணவீக்கமும் குறையும். மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.
ஜல்லிக்கட்டுக்கு பாஜக ஆதரவாக இருக்கிறது. அது ஒரு கலை என்றாலும் மாடுகள், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எடுத்துரைக்கும்.
காவிரி பிரச்சினை இப்போது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்குச் சென்றுவிட்டது. அதனால், மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இயலவில்லை. என்றாலும், பாஜக அரசு காவிரி பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்றார்.