Last Updated : 19 Sep, 2022 06:45 AM

 

Published : 19 Sep 2022 06:45 AM
Last Updated : 19 Sep 2022 06:45 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 569 இடங்கள்; அரசுப் பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவை நனவாக்கும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு உதவிபெறும் பள்ளிகளையும் கவனத்தில் கொள்ள வலியுறுத்தல்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவை நனவாக்கி வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்படி இந்த ஆண்டு 569 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் தமிழக அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை கொண்டுவந்தது. படிப்புக்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்பதாக அறிவித்தது.

இது அதிக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, பொறியியல், கால்நடை, ஆயுஷ், சட்டம், வேளாண் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அடுத்து வந்த திமுக அரசு அமல்படுத்தியது.

இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மருத்துவப் படிப்புக்கு மூன்றாவது ஆண்டாகவும், மற்ற படிப்புகளுக்கு இரண்டாவது ஆண்டாகவும் இந்த ஆண்டு தொடர்கிறது. 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

குறிப்பாக, நீட் தேர்வுக்கு முன்பு இருந்ததைவிட, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவராகும் கனவு அதிக அளவில் நனவாகிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முன்பு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. அதன்படி, 2014-15-ல் 38 பேரும், 2015-16-ல் 36 பேரும், 2016-17-ல் 34 பேரும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்னர், 2017-18-ல் 3 பேருக்கும், 2018-19-ல் 5 பேருக்கும், 2019-20-ல் 6 பேருக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது.

நீட் தேர்வுக்குப் பின்னர், மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது என்று, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்தது.

அதேநேரத்தில், தமிழக அரசின் புள்ளிவிவரங்களின்படி 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பின்னர், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

2020-21-ல் 435 பேரும், 2021-22-ல் 555 பேரும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி 455 பேருக்கு எம்பிபிஎஸ் படிப்பு, 114 பேருக்கு பிடிஎஸ் படிப்பு என மொத்தம் 569 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க உள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2,500-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு உதவிபெறும் பள்ளிகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை தமிழக அரசிடம் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட கல்வியாளர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கது.

அதேநேரத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை மணவர்கள்தான் படிக்கின்றனர். சில அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியில் வசதிபடைத்த மாணவர்களும் படிக்கின்றனர்.

சில மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளைவிட, அரசு உதவிபெறும் பள்ளிகள் அதிகமாக உள்ளன. அங்கு அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காத ஏழை மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். நிலைமை இப்படி இருக்கும்போது, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் புறக்கணித்துவிட்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது நியாயமானது அல்ல.

தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியான மாணவர்கள் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும், அதிக கட்டணம் செலுத்தியாவது நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு இருப்பதால், நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடுகிறது.

இருவருக்கும் இடையில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புஎன்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதி ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x