

தென்காசி: தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் கிராம தொடக்கப்பள்ளியில் சாதி பாகுபாடு நிலவுவதாக எழுந்த புகாரையடுத்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பாஞ்சாங்குளம் கிராமத்தில் சாதி பிரச்சினை காரணமாக பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த கடை உரிமையாளர் மகேஸ்வரன், அதற்கு உடந்தையாக இருந்த ராமச்சந்திரன் என்ற மூர்த்தி ஆகிய 2 பேரை கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதற்கிடையே, பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்உத்தரவின்பேரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணை அறிக்கை ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: பாஞ்சாங்குளம் ஆதிதிராவிடர் காலனி மற்றும் கீழத்தெரு ஆதிதிராவிட மக்களிடம் விசாரணை நடத்தியதில் பள்ளியில் சாதி பாகுபாடு தொடர்பாக யாரும் புகார்தெரிவிக்கவில்லை. அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரோ, மற்றவர்களோ பள்ளியில் எந்த பாகுபாடும் இருப்பதாக தெரிவிக்கவில்லை.
மேலும், பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் அருள்ராஜ் விசாரணையில் ஆஜராகி, தான் பணியாற்றும் 4 ஆண்டுகளில் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு கல்விகற்பிப்பதிலோ, உணவு வழங்குவதிலோ சாதிய பாகுபாடு இல்லைஎன்று தெரிவித்துள்ளார்.
இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றும் பரிசுத்தம்மாள் விசாரணையில் ஆஜராகி, பள்ளி குழந்தைகளுக்கு சாதி பாகுபாடு பார்த்து உணவு வழங்கப்படுவதில்லை என்றும், அனைத்து குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து உணவு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். எனவே, பள்ளியில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.