

விரைவு ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிட்டு 15 நாட்கள் ஆகியும் ரயில் ஓட்டுநர்கள், நிலைய அதிகாரிகளுக்கு பணிக்கான கால அட்டவணையை வழங்கவில்லை என ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது. இதையடுத்து, ரயில் ஓட்டுநர் மற்றும் நிலை அதிகாரிகளுக்கு பணிக் கான புதிய கால அட்டவணை தற்போது வழங்கப்பட்டு வரு கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ரயில்களின் கால அட்டவணையை தயாரித்து தெற்கு ரயில்வே அறிவிக்கும். இந்த ஆண்டில் சற்று தாமதமாக செப்டம்பர் 29-ம் தேதி புதிய கால அட்டவணை அறிவிக்கப்பட்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் 38 ரயில்கள் 20 நிமிடத்தில் இருந்து 60 நிமிடம் வரையும், 7 ரயில்கள் 60 நிமிடத்தில் இருந்து 90 நிமிடம் வரையும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட அம்சங்கள் புதிய காலஅட்டவணையில் இடம் பெற்று இருந்தன.
ஒவ்வொரு ஆண்டும் புதிய கால அட்டவணை வெளியிடப்படுவதற்கு முன்பே விரைவு ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள், நிலைய கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிகாரிகளுக்கு பணிக்கான கால அட்டவணை (வொர்க்கிங் டைம் டேபிள்) தனியாக வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பயணிகளுக்கான காலஅட்டவணை வழங்காததால் அவதிப்படுகின்றனர் என கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி ‘தி இந்து’வில் செய்தியாக வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, தற்போது ரயில்வே ஓட்டுநர்கள், நிலை அதிகாரிகளுக்கு பணிக்கான கால அட்டவணை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விரைவு ரயில் ஓட்டுநர்கள் தரப்பில் ‘தி இந்து’வுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.