தரமான சாலைகளால் எரிபொருள் செலவு மிச்சம்: நடிகர் சுரேஷ் கோபி கருத்து
பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜக சார்பில் 15 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழக பாஜகவின் இதர மொழி பிரிவு சார்பாக, சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப்பில் ஓணம்பண்டிகை கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சுரேஷ் கோபி,கலை, சமூக சேவை, வணிகம் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டை பிரதமர் மோடி நிர்வாகத் திறமையுடன் கொண்டு செல்கிறார். ஏழைகளுக்காக ஜன்தன் யோஜனா திட்டத்தை கொண்டு வந்து, அனைத்து மக்களும் வங்கி பரிவர்த்தனையை மேற்கொள்ள செய்துள்ளார். ஜன்தன் திட்டம் குறித்து பலரும் விமர்சித்தனர். ஆனால் அந்த திட்டம் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
பிரதமரின் நிர்வாக திறமையைபார்த்து நான் வியக்கிறேன். பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது, சர்வதேச எண்ணெய்நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. தனி மனித, குடும்ப வருவாய் உயர்ந்துள்ளது. முன்பெல்லாம் சாலைகள் மேடுபள்ளமாக இருந்தன. தற்போது நாட்டில் சிறப்பான சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாக செல்ல முடிகிறது. அதன் வாயிலாகவாகனத்துக்கான மாதாந்திர எரிபொருள் செலவும் மிச்சப்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
