ஐநூறும்.. ஆயிரமும்.. உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

ஐநூறும்.. ஆயிரமும்.. உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்
Updated on
3 min read

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகும்கூட அவற்றை மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தாலும்கூட, வங்கிக் கிளைகள், ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வது, கையில் இருக்கும் பணத்தை வங்கியில் செலுத்துவது தொடர்பாக இன்னமும் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

இதுதொடர்பான சந்தேகத்தைத் தீர்க்கவே இந்த புதிய பகுதி. இதற்காகவே ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையில் ஒரு பகுதியாக 044-42890012 என்ற எண் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களது கேள்விகள், சந்தேகங்களைப் பதிவு செய்யுங்கள். துறைசார்ந்த நிபுணர்கள் உங்களுக்கு விளக்கம் அளிக்க காத்திருக்கிறார்கள்.

முதல்கட்டமாக, வாசகர்களிடம் இருந்து நமக்கு வந்துள்ள கேள்விகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் இராம.சீனுவாசன் தரும் பதில்கள் இங்கே..

சிறுகச் சிறுக சேமித்ததற்கு வருமான வரி உண்டா?

நான் குடும்பத் தலைவி. எனக்கு வங்கிக் கணக்கு இல்லை. எதிர்காலத் தேவைக்காக கடந்த 15 வருடங்களாக சிறுகச் சிறுக சேமித்து தற்போது ரூ.5 லட்சம் கையில் வைத்திருக்கிறேன். இது நான் சம்பாதித்தது அல்ல. குடும்பச் செலவுக்காக கணவர், பிள்ளைகள் தந்த பணத்தில் சேமித்த பணம். இதை நான் எவ்வாறு மாற்றிக்கொள்வது? இதற்கு வருமான வரி செலுத்தவேண்டி இருக்குமா?

- எம்.அனுசுயா முருகானந்தம், காரைக்குடி

இல்லத்தரசிகள் பயப்பட வேண்டாம்

சிறுகச் சிறுக என்றாலும் வங்கியிலேயே நீங்கள் சேமித்திருக்கலாம். அதுதான் பாதுகாப்பானது. இப்போது உங்கள் பணத்தை மாற்றிக் கொள்ள வங்கியில் தரப்படும் படிவத்தைப் பூர்த்தி செய்து சிறிது சிறிதாக பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், ரூ.5 லட்சம் என்பது பெரிய தொகை. அதை அப்படி மாற்றுவது இயலாது. எனவே, புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி அதில் உங்கள் பணத்தைப் போடலாம். இதனால், வருமான வரி பிரச்சினை வருமோ என்று அச்சப்படத் தேவையில்லை. ஒருவேளை, வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பினாலும்கூட இந்தப் பணம் எப்படி சேர்க்கப்பட்டது என்ற உண்மையான விவரத்தைத் தெரிவித்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். அநாவசியமாக பயப்பட வேண்டாம்.

இதற்கு வங்கிகள் தரப்பில் அளித்த பதில்:

இல்லத்தரசிகளுக்கு வங்கிக் கணக்கு இருந்தால், எந்த அடையாள ஆவணமும் காட்டாமல், தாங்கள் சேமித்த பணத்தை அந்த கணக்கில் செலுத்தலாம். கணக்கு இல்லாவிட்டால் புதிதாக கணக்கு தொடங்கி அதில் செலுத்தலாம். ஆனால், இந்த வழியில் ரூ.2.5 லட்சம் மட்டுமே செலுத்தமுடியும். அதற்கு மேல் செலுத்தினால் வருமான வரித் துறை விளக்கம் கேட்கும். அப்போது, அந்தப் பணம் வந்ததற்கான வழி குறித்த உண்மையான தகவல்களைத் தந்தால் போதும். உண்மையான தகவல்களைக் கட்டாயம் ஏற்றுக்கொள்வார்கள். இல்லத்தரசிகள் பயப்படத் தேவையில்லை.

மக்களை ஏன் சிரமப்படுத்த வேண்டும்?

கோவையில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்ற தொழிலாளி மயங்கி விழுந்து இறந்துவிட்டார். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு இந்த அளவுக்கு மக்களுக்கு சிரமம் தர வேண்டுமா? இதைவிட எளிதான மாற்று வழிகள் எதுவுமே இல்லையா?

- எஸ்.தேவராஜ், கணபதி.

‘நோட்டுகள் செல்லாது’ என்பது காய்ச்சலுக்கான மருந்து!

கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால், இத்தகைய நடவடிக்கையைத்தான் எடுக்க முடியும். ஆனால், இதற்கு முன்பாக கறுப்புப் பணம் உற்பத்தியாகும் இடத்தைக் கண்டுபிடித்து அங்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். இப்போது எடுத்துள்ள நடவடிக்கை, காய்ச்சலை குணப்படுத்த மருந்து கொடுத்திருப்பது போல. காய்ச்சல் இப்போதைக்கு குணமாகலாம். ஆனால், மீண்டும் வரும். காய்ச்சல் ஏன் வந்தது என்று கண்டுபிடித்து திரும்பவும் அது வராமல் தடுப்பதுதான் மிகவும் அவசியம்.

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது ஏன்?

ரூ.100 நோட்டு தட்டுப்பாடு அதிகரித்துவரும் நிலையில், புதிய ரூ.100 நோட்டுகளை புழக்கத்தில் விடாமல் புதிதாக ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் விடுவதன் நோக்கம் என்ன? இதனால், மீண்டும் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படாதா?

- சி.எஸ்.பிரியதர்சினி, மதுரை.

அச்சடிப்பு செலவைக் குறைக்கும் முயற்சி

சில்லறைத் தட்டுப்பாடு குறித்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது கண்காணிக்கும். அவர்கள் கணிப்புப்படி ரூ.1000-க்குப் பதிலாக ரூ.2000-ஐ வெளியிடுவது சரியாக இருக்கும் எனத் தெரிந்ததால் அவ்வாறு செயல்பட்டுள்ளனர். 10, 20, 50 போன்ற குறைந்த முகமதிப்பு கொண்ட நோட்டுகளை மக்கள் தங்கள் இஷ்டத்துக்கு மடித்து, சுருட்டி, கசக்கிப் பயன்படுத்துவதால் ஓராண்டுக்குள் வீணாகிவிடுகின்றன. இதனால் புதிதாக பணம் அச்சடிக்க வீண் செலவு ஏற்படுகிறது. ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாது என்ற விவரம் வங்கி ஊழியர்களுக்கே தெரிவதில்லை. ஆனால், 500, 1000 நோட்டுகளை மக்கள் பத்திரமாகப் பயன்படுத்துகின்றனர். அதனால் அவற்றின் ஆயுட்காலம் 6 ஆண்டுகள் வரை நீடிக்கிறது. அந்தக் கண்ணோட்டத்தில்தான் தற்போது ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ரூபாய் நோட்டுகளை சேதப்படுத்தாமல் பத்திரமாகப் பயன்படுத்தினால் அனைத்து தரப்புக்குமே நல்லது என்பதை மக்கள் உணர வேண்டும்.

திருமணச் செலவை எப்படி சமாளிப்பேன்?

என் உறவினர் வீட்டில் இந்த சூழ்நிலையில் திருமணம் வைத்துள்ளனர். திருமணச் செலவுக்காக பெரிய தொகையை வங்கியில் இருந்தும் எடுக்க முடியவில்லை. யாரிடமும் கைமாற்று வாங்கவும் முடியவில்லை. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களை எப்படி தவிர்ப்பது?

- கே.தமிழ்ச்செல்வி, அண்ணாநகர், திருச்சி

ரூ.5 லட்சம் வரை பெறக்கூடிய வாய்ப்பு

திருமணச் செலவுகளுக்கு முடிந்த வரை டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தலாம். ஆனால், மண்டபத்தில் வாழை மரம் கட்டுபவருக்கு அப்படி பட்டு வாடா செய்யமுடியாது. ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இருக்கிற நேரங்களில், விசேஷ வீட்டுக்காரர்கள் அதற்கான அழைப்பிதழை சமர்ப்பித்தால் ஆவின் நிர்வாகம் அவர்களுக்கு தடையின்றி பால் சப்ளை செய்யும். அதுபோல, இப் போதுள்ள இக்கட்டான சூழலைச் சமாளிக்க திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சி களை நடத்துகிறவர்கள் அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் தேவை யான பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளும்படியான ஒரு சிறப்பு ஏற்பாட்டை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டும்.

இதுபற்றி வங்கி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘திருமண நிகழ்ச்சி நடப்பது தொடர்பாக எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு அத்தாட்சி கடிதம் பெற்று, அத்துடன் திருமண அழைப்பிதழையும் இணைத்து வங்கியில் சமர்ப்பித்தால், ரூ.5 லட்சம் வரை பெறக்கூடிய வழிவகை இருக்கிறது’’ என்று தெரிவித்தனர்.

தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்

நீங்கள் செய்யவேண்டியது... 044-42890012 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர்முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களைப் பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in