

மானாமதுரை அருகே நிலக்கொடை குறித்த அரச முத்திரையுடன் கூடிய பிற்கால பாண்டியர் சூலக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன.
மானாமதுரை அருகே உள்ள சின்னக்கண்ணனூர் சிலம்பரசன்என்பவர் கொடுத்த தகவல் அடிப்படையில், அப்பகுதியில் 2 சூலக்கற்களை பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் கண்டறிந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் நிலக்கொடை வழங்கும்போது 4 திசைக ளிலும் 4 கற்களை நடுவர். அதில் தங்களது முத்திரையையும், எந்த நோக்கத்துக்காக, எந்த கோயிலுக்கு வழங்கப்பட்டது என்ற குறியீடுகளையும் புடைப்புச் சிற்பமாக கற்களில் இடம்பெறச் செய்வர்.
சிவன், அய்யனார், காளி கோயில்களுக்கு கொடுத்த நிலக்கொடை எனில் கற்களில் திரிசூலம் இடம் பெறும். இதை தேவதானம் என்பர். பெருமாள் கோயிலுக்கு கொடுத்த நிலக்கொடை எனில் சங்கு, சக்கரம் இடம் பெறும்.
இது திருவிடையாட்டம் என்பர். சமணர் கொடையை குறிக்க முக்குடையும், பவுத்த கொடையை குறிக்க தர்மச் சக்கரமும் இடம் பெற்றிருக்கும். இதை பள்ளிச்சந்தம் என்பர்.
தற்போது கண்டறியப்பட்ட 2 கற்களிலும் ஒரு திரிசூலமும், திரிசூலத்தின் இடதுபுறம் பாண்டியர்களின் செண்டு கோலும், சூலத்துக்கு வலது புறம் ஒரு மீனும் நீள்வாக்கில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பிற்கால பாண்டியர்களின் ஆட்சியில் சிவன்கோயிலுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கொடை என அனுமானிக்கலாம். இங்கு ஏற்கெனவே சூலக்கல் கண்டெடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.