மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க ரிசர்வ் வங்கி மறுப்பு: அரசு ஊழியர் சங்கங்கள் கண்டனம்

மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க ரிசர்வ் வங்கி மறுப்பு: அரசு ஊழியர் சங்கங்கள் கண்டனம்
Updated on
2 min read

அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் தெரிவித் துள்ள கருத்துகள் வருமாறு:

எம்.துரைப்பாண்டியன் (பொதுச் செயலாளர், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்)

அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கும் செயல் தவறானது. மாதம், 30, 40 ஆயிரம் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய பரிவர்த்தனைகளை காசோலை மூலமோ, கார்டு களை பயன்படுத்தியோ மேற் கொள்வதில்லை. உதாரணமாக, வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது ஆகிய வற்றுக்கெல்லாம் காசோலையை பயன்படுத்த முடியாது. பணத்தைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. தினமும் ரூ.2 ஆயிரம் பணத்தை பெறுவதற்காக விடுப்பு எடுத்து ஊழியர்கள் வங்கியில் சென்று நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்களில் வேலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சுப்பிரமணியன் (மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர்)

மின்வாரியம் என்பது ஒரு அத்தியாவசியமான சேவை துறையாகும். இந்நிலையில், மாத ஊதியத்தை வங்கியில் செலுத்தினால் மின்வாரிய ஊழியர்கள் அதை எடுக்க தினம் ஒரு வங்கி, ஏடிஎம்மை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வேலை பாதிப்பதோடு மின்தடையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜெ.கணேசன் (தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர்)

அரசு அலுவலர்களுக்கான பணி காலை 10 முதல் மாலை 5.45 மணிவரை இருப்பதை போல், வங்கியிலும் பணிக்காலம் அதுதான். அந்த நேரத்தில்தான் நாங்களும் பணத்தை மாற்ற முடியும். இதனால், எங்கள் பணி பாதிக்கப்படுகிறது. அரசுக்கும் பணி பாதிப்பு என்பது நஷ்டத்தை ஏற்படுத்தும். வீட்டு வாடகை, அவசர மருத்துவச் செலவு போன்றவற்றுக்கு வங்கியில் தற்போது கிடைக்கும் பணம் போதுமானதல்ல. இதற்காகத்தான் நாங்கள் ரொக்கமாக ஊதியத்தை கேட்டோம். இதன் மூலம், வரும் செலவை கணக்கிட்டு குறைத்துக் கொள்ள முடியும். தற்போது ரொக்கமாக அளிக்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது எங்களுக்கு சாதகமான அறிவிப்பல்ல. இதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஆர்.தமிழ்ச்செல்வி (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்)

மத்திய, மாநில அரசுப் பணியாளர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி பணிநேரம் உள்ளது. இவ்வாறாக 24 மணிநேரமும் பணியில் இருப்பவர்களுக்கு, வங்கியில் நின்று பணம் எடுப்பது இயலாத காரியம்.12 நாட்கள் மட்டுமே தற்செயல் விடுப்பு உள்ளது. அதற்கு மேல் விடுப்பு அளிக்கப்படுவதில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் தற்போது விடுப்பு எடுப்பதும் இயலாததாக உள்ளது. அரசு ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் வீட்டு வாடகை உட்பட மற்ற செலவுகளை கையில் பணம் இருந்தால்தான் மேற்கொள்ள முடியும். தற்போது தான் மின் - ஆளுமை திட்டம் உள்ளது. முன்பெல்லாம் சம்பள பட்டுவாடா அலுவலருக்கு காசோலை வழங்கப்பட்டு, அதை வங்கியில் செலுத்தி சம்பளம் எடுத்துக் கொள்வோம். அதைத் தான் நாங்கள் தற்போது கேட்கிறோம். எங்கள் பிரச்சினை மக்களுக்கு தெரியாது. அரசுக்கு நன்றாக தெரியும். அரசு இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி (நாளை) டிஎம்எஸ் வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in