திருப்பரங்குன்றத்தில் 3-ம் இடத்தை பிடிப்பது யார்?- பாஜக-தேமுதிக இடையே கடும் போட்டி

திருப்பரங்குன்றத்தில் 3-ம் இடத்தை பிடிப்பது யார்?- பாஜக-தேமுதிக இடையே கடும் போட்டி
Updated on
2 min read

திருப்பரங்குன்றம் தொகுதியில் 3-ம் இடத்தை பிடிப்பது யார் என்பதில் தேமுதிக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

திருப்பரங்குன்றம் இடை த்தேர்தல் நவ.19-ல் நடக்கிறது. இத்தொகுதியை தக்கவைக்க அதிமுகவும், கைப்பற்ற திமுகவும் கடுமையான போட்டியில் இறங்கி யுள்ளன.

அதிமுக கடந்த தேர்தலில் 23 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுகவை வீழ்த்தியது. தற்போது 50 ஆயிரத்துக்கும் குறையாமல் வாக்கு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பது அதிமுகவின் இலக்கு. இதற்காக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 10 அமைச்சர்கள் தலைமையில் 12 மாவட்டத்திலிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர தேர்தல் பணியாற்றினர்.

இதற்கு சற்றும் சளைத்தவர்கள் நாங்கள் இல்லை என்ற பாணியில் திமுகவும் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொண்டது. ஜெயலலிதா உடல் நிலை, ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து திமுக பிரச்சாரம் செய்துள்ளது. இக்கட்சிக்கு ஆதரவாக 10 தென்மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 5 ஆயிரம்பேர் 15 நாட்களாக தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்துள்ளனர். இதனால் இவ்விரு கட்சியில் வெற்றி பெறுவது யார், வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்பது மட்டுமே இக்கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இத்தேர்தலில் மற்றொரு பரபரப்பாக 3-ம் இடத்தை பெறப்போவது யார் என்பதில் தேமுதிக, பாஜக இடையே கடும் போட்டி காணப்படுகிறது. பாஜக வேட்பாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் திட்டமிட்டு மேற்கொள்ளும் பிரச்சாரம், நிர்வாகிகள் உழைப்பு, மாநில, தேசிய பொறுப்பாளர்கள் வாக்கு சேகரிப்பு, நண்பர்கள், சில சமூக அமைப்புகள் ஆதரவு என பல்வேறு விஷயங்களை நம்பியுள்ளார். பிரச்சாரத்தில் வாக்காளர்களை கவர்ந்த வேட்பாளர்களில் இவருக்கே முதலிடம் என்கின்றனர் கட்சியினர். கட்சி வாக்குகளை குறிவைத்து பிரச்சாரம் நடக்கிறது. சவுராஷ்டிர சமூகத்தினரின் வாக்குகள் கணிசமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

2006-ல் 4,474(ஒரு சதவீதம்) வாக்குகள் 2011-ல் 4,543(2 சதவீதம்) வாக்குகள், 2016-ல் 7,698(2 சதவீதம்) வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நிச்சயம் இத்தேர்தலில் 20 ஆயிரம் வாக்குகளுக்கு குறையாமல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். வாக்குகள் எவ்வளவு என்பதைவிட தேமுதிகவை முந்தி 3-ம் இடத்தை பெற வேண்டும் என்பதே முக்கிய இலக்காக உள்ளது. 500 ரூபாய், 1000 ரூபாய் ஒழிப்பு விவகாரம் முதலில் பா.ஜ.க.வினருக்கு சாதகமாக கருதப்பட்டது. இப்போது ஏ.டி.எம். மையங்களில் குவியும் கூட்டம், வரிசையில் மக்கள் படும்பாடு இவர்களுக்கு பாதகமாக திரும்பியுள்ளது.

தேமுதிக சார்பில் டி.தன பாண்டியன் போட்டியிடுகிறார். இவருக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து ள்ளனர். 4 மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொகுதியில்தான் தேமுதிக கட்சியே உதயமானது. கணிசமான வாக்குகளை கொண்டுள்ள இக்கட்சிக்கு 2016 தேர்தலில் கடும் சரிவு ஏற்பட்டது.

2011-ல் தேமுதிக சார்பில் ஏ.கே.டி.ராஜா எம்எல்ஏ.வாக 49 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தேர்வானார். ஆனால், 2016-ல் மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் கந்தசாமி 15,275 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதில் தேமுதிகவின் தனிப்பட்ட வாக்குகள் எவ்வளவு என்பதை கணிக்க முடியாத நிலையில் அக்கட்சியினர் உள்ளனர்.

கடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மாநில அளவில் பாஜகவைவிட தேமுதிக கூட்டணி குறைந்த வாக்குகளே பெற்றுள்ளதால் தேமுதிகவினரே கலக்கத்தில் உள்ளனர். தற்போது கணிசமான வாக்குகளை பெற்று, இழந்த செல்வாக்கை மீட்க தீவிரம் காட்டுகின்றனர். குறைந்தபட்சமாக பாஜகவை பின்னுக்கு தள்ளி, 3-ம் இடத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.

அதிமுக-திமுக இடையே வெற்றியை யார் பெறுவார் என்ற எதிர்பார்ப்புக்கு இணையாக 3-ம் இடம் பெறுவது தேமுதிகவா, பாஜகவா என்ற கேள்வியும் முன்னிற்கிறது. இதற்கு விடை தெரியாமல் அக்கட்சியினர் தவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in