

தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்புத் திருவிழா அக்.11-ம் தேதி வரை நடைபெறுகிறது என தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய அரசு பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் ரூ.250 செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் கணக்கு தொடங்கலாம்.
ஒரு நிதியாண்டில் குறைந்த பட்ச தொகை ரூ.250, அதிக பட்ச தொகையாக ரூ.1.50 லட்சம் வரை கணக்கில் செலுத்தலாம். அசலுடன் சேர்ந்து வட்டியும் அடுத்த வருட அசலாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தற்போதைய வட்டி 7.6 சதவீதமாகும். கணக்கில் செலுத்தும் தொகை வட்டி மற்றும் முதிர்வு தொகை என அனைத்துக்கும் பிரிவு 80- ன் படி பெற்றோர்கள் வருமான வரிவிலக்கு பெறலாம்.
செல்வமகள் சேமிப்பு கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். குழந்தை 10–ம் வகுப்பு முடித்ததும் அல்லது 18 வயது அடைந்ததும் மேற்படிப்புக்காக 50 சதவீத தொகையைப் பெறலாம்.
பெண் குழந்தை யின் திருமணத்தின் போது முழு தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்புத் திருவிழா அக்.11-ம் தேதி வரை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.