Last Updated : 18 Sep, 2022 06:54 PM

 

Published : 18 Sep 2022 06:54 PM
Last Updated : 18 Sep 2022 06:54 PM

சேலம் அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து: தந்தை - மகன் உள்பட 6 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்ட பகுதியினை ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம்: சேலம், பெத்தநாயக்கன் பாளையத்தில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்து, இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்னி பேருந்து - லாரி மோதி விபத்து: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் தீபா என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக தீபாவின் உறவினர்கள் 7 பேர் சென்னைக்கு செல்ல திட்டமிட்டனர்.

இதற்காக சேலத்தில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தனர். நேற்று நள்ளிரவு பெத்த நாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் சீர் வரிசை பொருட்களுடன் பேருந்துக்காக காத்திருந்தனர்.

சேலத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து பயணிகளை ஏற்ற அங்கு வந்து நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சீர்வரிசை பொருட்களை பேருந்தின் பின்பகுதியில் வலது புறத்தில் இருந்த லக்கேஜ் பெட்டியை கிளீனர் உதவியுடன் திறந்து வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, சேந்தமங்கலத்தில் இருந்து ஆத்தூர் திமுக. கவுன்சிலருக்கு எம்-சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த லாரி பேருந்தின் பின்னால் சீர்வரிசை பொருட்கள் ஏற்றிக் கொண்டிருந்த 7 பேர் மீது மோதியது.

விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு: இந்த விபத்தில், பெத்தநாயக்கன்பாளையம், சிவன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு(63), அவரது மகன் ரவிக்குமார்(41), தலைவாசல்,ஆறகளூரை சேர்ந்த செந்தில்வேலன்(46), ஆத்தூர், கொத்தாம்பாடியை சேர்ந்த சுப்பிரமணி (40) மற்றும் ஆம்னி பேருந்தின் கிளீனரான சேலத்தை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (21) ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த செந்தில்வேலன், சுப்பிரமணி, ரவிக்குமார், திருநாவுக்கரசு, விஜயா, தீபன் சக்கரவர்த்தி.

இந்த விபத்தில் திருநாவுக்கரசுவின் மனைவி விஜயா (60) மற்றும் உறவினர்களான ஆத்தூர், துக்கனூர் ஏரிக்கரையைச் சேர்ந்த மாதேஸ்வரி (60), அவரது மகன் ஜெயப்பிரகாஷ்(40) மூவரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், வாழப்பாடி டிஎஸ்பி ஸ்வேதா தலைமையில் ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமா சங்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடம் வந்தனர். மேலும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை போலீஸார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விஜயா உயிரிழந்தார்.

இதன் மூலம் உரியிரிழப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. படுகாயமடைந்த மாதேஸ்வரி, ஜெயபிரகாஷ் இருவரும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓட்டுநர் இருவர் கைது: இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். ஆம்னி பேருந்தை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதால் தான் டாரஸ் லாரி அதிவேகமாக வந்து மோதியது என போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரியை சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சனம்பட்டியை சேர்ந்த கார்த்திக்கையும், ஆம்னி பேருந்து ஓட்டுனர் பரமேஸ்வரனையும் போலீஸார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த திருநாவுக்கரசு பெத்தநாயக்கன் பாளையத்தில் தையல் கடை வைத்துள்ளார். இவரது மகன் ரவிக்குமார் பிளக்ஸ் பேனர் கடை வைத்துள்ளார். சுப்பிரமணி லேப் டெக்னீசியனாகவும், செந்தில்வேலன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். கிளீனர் தீபன் சக்கரவர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அடிக்கடி விபத்தால் மக்கள் அச்சம்: சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து சம்பவம் நடந்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நேற்று நடந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கான பகுதிகளை கண்டறிந்து முன் அறிவிப்பு பலகை, பேரிகாட், எச்சரிக்கை தகவல் உள்ளிட்ட விபத்து தவிர்ப்பு நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு: பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஆறு பேர் உயிரிழந்த விபத்துப் பகுதியில் நேற்று ஆட்சியர் கார்மேகம், சேலம் எஸ்பி ஸ்ரீஅபிநவ், ஆத்தூர் ஆர்டிஓ சரண்யா, வட்டாட்சியர் அன்புச்செழியன், ஏத்தாப்பூர் செயல் அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்த இடத்தையும், எவ்வாறு விபத்து நடந்தது? என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியையும் பார்வையிட்டு ஆட்சியரும், எஸ்.பி-யும் விசாரணை செய்தனர். அந்தப் பகுதியில் மீண்டும் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x