'அமைச்சர்களைவிட அதிகாரம்மிக்கவராக இருப்பவர் உதயநிதிதான்' - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் | கோப்புப் படம்
வானதி சீனிவாசன் | கோப்புப் படம்
Updated on
1 min read

கோவை: தமிழக அமைச்சர்களைவிடவும் அதிகாரம் மிக்கவராக இருப்பவர் உதயநிதிதான் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ராமலிங்கம் காலனியில் மக்கள் சேவை மையத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று (செப்.18) நடைபெற்றது.

இதை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறும்போது, "கோவை தெற்கு தொகுதியில் மக்களை சந்தித்து கமல்ஹாசன் குறைகளைக் கேட்டுள்ளார். கழிப்பறை கட்டி தருகிறேன், சுத்தம் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். நான் வேண்டுமானால் எந்த வார்டில் பொது கழிப்பிடங்கள் இருக்கிறது.எத்தனை பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது என்று பட்டியல் தருகிறேன். கமல்ஹாசன், உதயநிதிக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார். உதயநிதியோடு படம் சம்பந்தமாக பேசும்போது, கோவை தெற்கு தொகுதி பிரச்சினையைக் பற்றி பேசினால் மக்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில், அமைச்சர்களைவிடவும், அதிகாரம் மிக்கவராக இருப்பவர் உதயநிதிதான். சட்டப்பேரவையில் முதல்வருக்கு வணக்கம் தெரிவிப்பதை விட உதயநிதிக்குதான் அனைவரும் முதலில் வணக்கம் தெரிவிக்கிறார்கள்”என்றார்.

மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்:

முன்னதாக வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்த காய்ச்சல்களால் பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், குழந்தைகள் நல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இது, பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பல வகையான காய்ச்சல்கள் பரவி வருவதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காய்ச்சல் அதிகமாக பரவும் பகுதிகளை கண்டறிவதற்கு சோதனைகள் நடத்தப்படவில்லை. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் அனைத்து வார்டுகள், ஊரகப் பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் அவசர மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in