Published : 18 Sep 2022 01:27 PM
Last Updated : 18 Sep 2022 01:27 PM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் 2024 ஆம் ஆண்டுக்குள் தயாராகும்: அமைச்சர் எ.வ.வேலு

ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர்

மதுரை: 2024 ஆம் ஆண்டுக்குள் ஜல்லிக்கட்டு வளாக அரங்கப் பணிகளை முடிப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இரவு பகல் பார்க்காமல் பணிகள் நடைபெறும் என்று பொதுப்பணிகள் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக பிரசித்திப் பெற்றதாக திகழ்வதால் இந்தப் போட்டிகளை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க தமிழக அரசு அறிவித்து இருந்தது. இன்று இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுவதற்கான இடத்தை பொதுப்பணிகள் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் வயித்துமலை அடிவாரத்தில் ஆய்வு செய்தனர்.

இந்த இடத்தில்தான் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது. பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் இடம் கட்டுமான உத்திகள் குறித்து விவரித்தனர். மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘‘தென்னகத்தின் வீர விளையாட்டு, மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு. தென்னக மக்களின் மனநிறைவடையும் வகையில் தமிழக முதல்வர் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் - வளாகம் அமைத்து விடுவோம்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் பகுதியின் அருகிலேயே மைதானம் அமைக்க வேண்டும் என கேட்டுகொண்டதன்படி தற்போது இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம்.

இங்கு மேய்ச்சல்கால் புறம்போக்கு அரசின் 66 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் முதற்கட்டமாக 16 ஏக்கர் தேவைப்படும் அதனை என்னென்ன அனுமதிகள் தேவையோ அவற்றை எல்லாம் பெற்று பணியை தொடங்கிட, முதல்வர் உத்தரவுப்படி இங்கு வந்துள்ளேன்.

இந்த இடம் வனப்பகுதி ஒட்டிய அரசு இடமாக இருந்தாலும், எந்தச் சூழலிலும் வன இடத்தை அரசு கையகப்படுத்தாது. மலையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் தேக்கும் அளவிற்கு இங்கு 66 ஏக்கர் குளம் ஒன்று உள்ளது. பயனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தையும் சீர் செய்து அழகுறச் செய்யலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டு வளாகம் அமையும் பொழுது குளமும் சிறப்பான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

வயித்துமலையில் மழை பெய்து மழைக்காலங்களில் மழை நீர் வரும். மலையிலிருந்து வரக்கூடிய தண்ணீர் தடைபடாமல் நீர் பாசனத்திற்கு செல்லும். இதற்கு எந்த விதமான குந்தகம் ஏற்படாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல்வர் ஒப்புதல் பெறப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, 16 ஏக்கரில் மண் பரிசோதனை செய்து, இடத்தை சமப்படுத்தி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். முதல்வரின் அனுமதியும், நிர்வாக ஒப்புதலும் பெற்று விரைந்து முடிக்கக்கூடிய வகையில் முறையாக ஒப்பந்தம் விடப்படும், தொடர்ந்து நாளை முதல் வருவாய்த் துறையினர் அளவீடுகள் செய்து, தொடர்ந்து சீர் செய்யப்பட்டு பணிகள் தொடங்கும். 2024 ஆம் ஆண்டுக்குள் முன்னதாக இந்த இடத்தில் கட்டுமான பணிகளை முடிப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இரவு பகல் பார்க்காமல் பணிகள் நடைபெறும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த குளம்

எ.வ.வேலு மேலும் கூறுகையில், ‘‘வனப்பகுதி ஒட்டிய அரசு இடமாக இருந்தாலும், எந்தச் சூழலிலும் வன இடத்தை அரசு கையகப்படுத்தாது. மலையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த 66 ஏக்கர் உள்ளேயே உள்ள குளம் ஒன்றும் உள்ளது. பயனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தையும் சீர் செய்து அழகுறச் செய்யலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மைதானம் வளாகம் அமையும்போது குளமும் சிறப்பான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த குளத்திற்கு மலையில் மழைக்காலத்தில் இயற்கையாக பெய்யும் மழை நீர் வரும். அந்த மழை தண்ணீர் தடைபடாமல் நீர் பாசனத்திற்கு செல்லும் பயன்பாட்டுக்கு, எந்த விதமான குந்தகம் ஏற்படாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x