பரவும் இன்ஃப்ளுயன்சா; பள்ளிகளுக்கு விடுமுறைவிட அவசியமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பரவும் இன்ஃப்ளுயன்சா; பள்ளிகளுக்கு விடுமுறைவிட அவசியமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அதிகரித்துவரும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் காரணமாக இப்போதைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் இல்லை என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 37-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று நடக்கிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தியா முழுவதும் அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.

கடந்த ஜூலை 15-ம் தேதிதொடங்கப்பட்ட இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி திட்டம், வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. செப். 30-க்கு பிறகு 18 முதல் 59 வயதுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை தனியாரில் ரூ.386 செலுத்திதான் போட்டுக் கொள்ள வேண்டும். அதனால் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும் என்று மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் புதன்கிழமைகளில் அனைத்துவகை தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது இனி கரோனா தடுப்பூசியும் செலுத்தப்படும். தமிழகத்தில் தான் இலவச தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும்.
தமிழகத்தில் இதுவரை இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டியது இல்லை. காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய சூழல் தற்போதைக்கு இல்லை. தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால, பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இரண்டு, மூன்று தினங்கள் அவர்களை வீட்டில் வைத்து முறையான மருந்துகளைக் கொடுத்து உடல்நிலை சரியான பின்னால் அனுப்பினால் போதும். இன்ஃப்ளுயன்சா காயச்சல் வழக்கமான பருவமழை காய்ச்சல்தான். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மருத்துவ குழுவினர் பள்ளிக்கு செல்ல இருக்கிறார்கள். அப்போது மாணவர்களின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in