மதன், பச்சமுத்துவுக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன்
சினிமா ஃபைனான்சியர் முகுந்சந்த் போத்ரா தொடர்ந்த வழக்கில், மதன் மற்றும் பச்சமுத்துவுக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.
சினிமா ஃபைனான்சியர் முகுந்சந்த் போத்ரா சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வேந்தர் மூவிஸ், அதன் நிர்வாகியான எஸ்.மதன், சினுநாகப்பன், பச்சமுத்து என்ற பாரி வேந்தர் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது:
ரூ.2 கோடி வழங்க வேண்டும்
கடந்த ஏப்ரல் மாதம் மதனுக்கும், வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கும் ரூ.1 கோடி கடன் வழங்கினேன். அதற்காக அவர்கள் வழங்கிய காசோலைகள் பணமின்றி திரும்பி வந்தன. எனவே, எனது பணம் ரூ.1 கோடியுடன் அதற்கு இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் வரும் 30-ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகக் கோரி மதன், பச்சமுத்து, சினுநாகப்பன் ஆகியோருக்கு சம்மன் பிறப்பித்துள்ளது.
