காவிரி பிரச்சினையில் தமிழக கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: மன்னார்குடி ரெங்கநாதன் வலியுறுத்தல்

காவிரி பிரச்சினையில் தமிழக கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: மன்னார்குடி ரெங்கநாதன் வலியுறுத்தல்
Updated on
1 min read

காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று (நவ.5) கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பிரச்சாரப் பயணம் தொடங்க உள்ளது.

இதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து கன்னியாகுமரிக்குப் புறப்படும் முன்னர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதனைச் சந்தித்து, விவாதித்தனர். அப்போது, பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகளுக்கு ரெங்கநாதன் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ரெங்கநாதன் கூறியதாவது: காவிரி பிரச்சினையை உச்ச நீதிமன்றம்தான் தீர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு, கர்நாடகாவுக்கு ஆதரவான அணுகுமுறையைக் கையாள்கிறது. அதனால், தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழகத்துக்குத் தண்ணீர் தரக் கூடாது என போராடி வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் அப்படி ஒருங்கிணைப்பு ஏற்படாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் மிகப்பெரிய அளவில் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து வருகின்றனர்.

தற்போது உள்ள நெருக்கடியான சூழலில், பழைய பிரச்சினைகளை மறந்துவிட்டு, தமிழக அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து இப்பிரச்சினையைக் கையாள வேண்டும். காவிரி உட்பட நதிநீர் பிரச்சினைகளில் அரசியலைப் புகுத்த வேண்டாம். இந்த பிரச்சாரப் பயணம் கோரிக்கைகளை வலியுறுத்தும் பயணமாக செல்கிறது. இது வெற்றிப் பயணமாக நடைபெற வாழ்த்துகள் என்றார்.

மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயண தொடக்க விழா இன்று (நவ.5) கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடைபெற உள்ளது. காந்திய இயக்கத் தலைவர் குமரி அனந்தன் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கிவைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட பூமி பாதுகாப்பு இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in