

பிரதமர் மோடியின் 72-வதுபிறந்த நாளையொட்டி, பாஜகவினர் நேற்று இனிப்பு வழங்கியும், பொதுமக்களுக்கு சமபந்திவிருந்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கொண்டாடினர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மாநில பொதுச் செயலர் கேசவ விநாயகம் தலைமையிலான நிர்வாகிகள், பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் லட்டு வழங்கினர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.
சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிறுத்தம் அருகில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. பாடி சிவன் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஏராளமானோர் பங்கேற்று, உணவருந்தினர்.
மாத்தூரில் நரிக்குறவர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொளத்தூர் மக்காராம் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலச் செயலர் சதீஷ்குமார் தலைமையில், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் 1,072 கிலோ மீன்களை மக்களுக்கு வழங்கினார்.
வட சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேற்று பிறந்த 40 குழந்தைகளுக்கு பழங்கள், ஊட்டச்சத்து மாவு உள்ளிட்டவை அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.
இதேபோல, சென்னைமுழுவதும் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி பல்வேறுநிகழ்ச்சிகள் நடைபெற்றன.