Published : 18 Sep 2022 04:30 AM
Last Updated : 18 Sep 2022 04:30 AM
பெருங்களத்தூரில் ரூ.37 கோடியில் செங்கல்பட்டு–தாம்பரம் மார்க்கத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
சென்னையின் முகப்பு பகுதியான பெருங்களத்தூரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் வாகனங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இது குறித்து பேரவையிலும் தொகுதி எம்எல்ஏக்கள் குரல் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து கடந்த 2000 -2001-ம் ஆண்டு, ரூ.76 கோடிஒதுக்கீடு செய்ய நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் வழங்கியது. ஆனால், பணிகள் நடக்கவில்லை. இது குறித்து இந்து தமிழ் நாளிதழில் பல முறை செய்தியும் வெளியானது. இக்கோரிக்கைக்காக அரசியல் கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின.
இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை சார்பில் ரூ.76 கோடி மதிப்பீட்டில் பெருங்களத்தூர் பகுதியை ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி நிறைவடைந்தன. இதனிடையே 2020-ம் ஆண்டு ரூ.234.37 கோடி திருத்திய நிர்வாக ஒப்புதல்வழங்கப்பட்டு பணிகள் தொடங்கின.
இதன்படி, ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு- தாம்பரம் மார்க்கமாக ரூ.37 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்தஒருபகுதி மேம்பால பணிகள் நிறைவடைந்தன. 23 தூண்களுடன் 743 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மேம்பாலம் ஒரே மார்க்கத்தில் செல்லும் இருவழித் தடங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இம்மேம்பாலத்தை முதல்வர்ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.அதைதொடர்ந்து, வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டன.
மேம்பாலம் திறக்கப்பட்டதால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், மற்றபகுதிகளிலும் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் மேம்பாலத்தை முழுமையாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT