Published : 18 Sep 2022 04:30 AM
Last Updated : 18 Sep 2022 04:30 AM

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 53-வது நாளாக நடைபெறும் போராட்டத்துக்கு வந்த பி.ஆர்.பாண்டியன் கைது

பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் 53-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் 53-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று கைது செய்யப்பட்டார்.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ளபரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசும் நிலம் கையகப்படுத்துவதற்காக கருத்துக் கேட்புக் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரண்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கம்மாபுரம், சிங்கில்பாடி என 12 கிராமங்களை உள்ளடக்கி இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரத்தில் 53-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அந்தக் கிராமங்களுக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வேறுசில அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளே நுழைய காவல்துறை அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்துக்களை கேட்கவும் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவிக்கவும் வந்தார்.

அவரை செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அருகே வழிமறித்து போலீஸார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரை காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

மாலை வரை அவர் போராட்ட பகுதிக்குச் செல்ல முடியாதவாறு போலீஸார் அவரை தடுத்து வைத்திருந்தனர். வேறு யாரேனும் அந்தப் பகுதிக்குள் நுழைவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x