

நகை பறிப்பில் ஈடுபட 10 பெண்கள் கொண்ட ஒரு கும்பல் திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை திரு.வி.க.நகர் சண்முகம் தெருவில் வசிப்பவர் கீதா. கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்தார். வியாசர்பாடி அருகே ஆட்டோ வந்தபோது 3 பெண்கள் ஆட்டோவில் ஏறியுள்ளனர். அவர்கள் கீதாவிடம் நன்றாக பேசியுள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை நைசாக பறிக்க முயன்றுள்ளனர். கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்ட கீதா, சத்தம் போட்டு ஆட்டோ ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளார்.
உடனே ஆட்டோ ஓட்டுநர் மூலகொத்தலம் அருகே ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரரிடம் வண்டியை நிறுத்தி விவரங்களை கூற, 3 பெண்களும் ஆட்டோவில் இருந்து இறங்கி, தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீஸார் மற்றும் அருகே இருந்தவர்கள் விரட்டி பிடிக்க, ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார். 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த சடையாட்சி மற்றும் சர்மிளா என்பது தெரிந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், திருடுவதுதான் அவர்கள் தொழில் என்பதும், பெண் களிடம் நகை திருடுவதற்காகவே சமயபுரத்தில் இருந்து 10 பெண் கள் கொண்ட கும்பல் சென்னைக்கு வந்திருப்பதும், அவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வருவதும் தெரிந்தது.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் திருட்டில் ஈடுபடும் பெண்களை பிடிக்க தனிப்படை அமைத் துள்ளனர். பொதுமக்கள் கவன மாக இருக்கவும் எச்சரிக்கைவிடுத் துள்ளனர்.