மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் புதிய கணக்கு தொடங்கப்படும்: விவசாயிகள் பயிர்க்கடன் தொகையைப் பெற அரசு ஏற்பாடு

மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் புதிய கணக்கு தொடங்கப்படும்: விவசாயிகள் பயிர்க்கடன் தொகையைப் பெற அரசு ஏற்பாடு
Updated on
2 min read

பயிர்க்கடன் தொகையை பெற வசதியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விவசாயிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் கணக்கு தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் 9-ம் தேதி முதல் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதைத் தொடர்ந்து, செல்லாத நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிக் கணக்குகளில் செலுத்தும் முறை, மேலும் அவற்றை மாற்றிக் கொள்வது குறித்தும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது.

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி, வங்கிகள் என பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகள்படி இத்திட் டத்தை செயல்படுத்தும் என மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை கடந்த 9-ம் தேதி அறிவித்தது. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கி என்ற வரன்முறைக்குள் வரவில்லை. இதனால் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை விவசாயிகளிடம் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கணக்கு வைத்திருப்பதால், இச்சங்கங்கள் வாடிக்கையாளராகவே கருதப்படுகின்றன. இதனால், கூட்டுறவு சங்கங்களும் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெற முடிகிறது. இதனால், விவசாயிகளுக்கு இந்த சங்கங்கள் பயிர்க்கடன் வழங்க முடியவில்லை.

இவ்வாறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலும், அவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கும் வகையிலும் ஒரு முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தற்போதுள்ள நடைமுறைகளின்படி விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர்க்கடன்களை அனுமதிக் கும். சங்க அளவில் பயிர்க்கடன் அனுமதிப்பதில் உள்ள அதிகாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.

பயிர்க்கடன் ரொக்கப் பகுதியை வழங்க, மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் விவசாயி பெயரில் ‘உங்கள் வாடிக்கையாளரை அறிதல்’ என்ற விதிகள்படி கட்டணம் வசூலிக்காமல் புதிய கணக்கு தொடங்கப்படும். இக்கணக்குகள் மூலம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மின்னணு பரிமாற்ற சேவைகள், காசோலை மற்றும் வரைவோலை வசதிகளை விவசாயிகள் பெற முடியும். இதனால் ஏற்படும் பணிப்பளுவை சமாளிக்க, மத்திய கூட்டுறவு வங்கிகள் ஓய்வுபெற்ற பணியாளர்களை தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்தும்.

கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அனுமதிக்கப்பட்டதும், தொடர்புடைய கூட்டுறவு வங்கிக்கு கூட்டுறவு கடன் சங்கத்தால் பற்றுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும். விவசாயிகள், மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் ரொக்கப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

விவசாய உறுப்பினரின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட கடன் தொகையில் வாரத்துக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கமாக வங்கிக் கணக்கில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விவசாய இடு பொருட்களான உரம், விதைகளுக்கான தொகையை விவசாயிகள் ரொக்கமாக செலுத்த வேண்டியதில்லை. அதை பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கும். அதேபோல, விவசாயத்துக்கு தேவைப்படும் உழவு இயந்திரங்களுக்கான வாடகையும் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைக்கப்படும். அந்தத் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்படும்.

பயிர்க்காப்பீட்டு பிரீமியம் தொகையும் விவசாயிகளின் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைக்கப்பட்டு, அதை டிசம்பர் 15-ம் தேதிக்கு முன்பு தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் செலுத்திவிடும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறாத விவசாயிகள், வரைவோலை அல்லது ரொக்கமாக செலுத்தி தங்களுக்கு தேவையான உரம், இடு பொருட்களை வாங்கலாம். விவசாயப் பணிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான அரசாணையும் நேற்றே வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in