

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி கருமண்டபம் சக்தி நகர், ஜெய நகர் பகுதிகளில் சாலையோரத்தில் பாஜக கொடியேற்றுவதற்காக, நேற்று முன்தினம் இரவு பாஜகவினர் கொடிக் கம்பங்களை நட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை அந்தக் கொடிக் கம்பங்களை காணவில்லை. கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இதையறிந்த பாஜக மண்டலத் தலைவர் பரமசிவம் உள்ளிட்டோர் அங்கு வந்து, மீண்டும் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திமுக கவுன்சிலர் ராமதாஸ் உள்ளிட்டோர் அங்குவந்து, மாநகராட்சி மற்றும் காவல் துறையின் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைக்கக்கூடாது என தெரிவித்தனர்.
அதற்கு, அருகிலுள்ள திமுக கொடிக்கம்பமும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதையும் உடனடியாக அகற்றும்படியும் பாஜகவினர் வலியுறுத்தினர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கன்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய்தங்கம் மற்றும் போலீஸார் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதேபோல மணிகண்டம், தாத்தையங்கார்பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையம், ராம்ஜிநகர் அருகேயுள்ள அம்மாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பாஜகவினர் உரிய அனுமதியின்றி கொடியேற்ற திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
பெரம்பலூரில்...: பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக சார்பில் பெரம்பலூர் பாலக்கரை அருகே நேற்று முன்தினம் பேனர் வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், அந்த பேனர் நேற்று கிழித்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பாஜக நகரத் தலைவர் ஜெயக்குமார் நடத்திவரும் கடையின் வெளிப்பகுதியில் வைத்திருந்த குளிர்சாதனப் பெட்டி, பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரம், காஸ் அடுப்பு ஆகியவற்றையும் யாரோ உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.